முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று பொருட்களை விநியோகிக்கும் ‘முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை மக்களின் வீடு தேடிச் சென்றடையச் செய்யும் தமிழக அரசின் முயற்சியின் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் ‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 12-ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டம் மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும் எனவும், இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாய விலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்தினாளிகளும், ஆக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்கள் பயனடைவார்கள் எனக்கூறப்படுகிறது.
மாதந்தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், இத்திட்டத்தால் அரசுக்கு ரூ.30.16 கோடி செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின், இத்திட்டத்தை சென்னையில் தொடங்கிவைக்கும் அதேவேளையில், மாவட்டங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.