விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி, 10 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே ராமதேவன்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. நேற்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பட்டாசு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மருந்தில் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றியது.
ஆலையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் தீ பரவி, பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில், 4 அறைகள் தரைமட்டாகின. இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயைக் கட்டுப்படுத்தி, அப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த வெடிவிபத்தில் அங்கு பணியில் இருந்த 10 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பட்டாசு ஆலை போர்மேன் சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக, பட்டாசு ஆலை வெடி விபத்தில், உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.