2022ம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி, “பொதுச்செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் இபிஎஸ் அந்த விதத்தில் தேர்வு செய்யப்படவில்லை” என்று கூறி சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை நிராகரிக்க கோரி இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை கடந்த ஜூலை மாதம் சிட்டி சிவில் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக இபிஎஸ் சென்னை ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இன்று இந்த மனு நீதிபதி பி.பி. பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இபிஎஸ் தரப்பில் வக்கீல்கள், “சூரியமூர்த்தி அதிமுக அடிப்படை உறுப்பினரே இல்லை. உறுப்பினராக இல்லாதவர் பொதுச்செயலாளர் பதவி குறித்து கேள்வி எழுப்ப முடியாது” என்று வாதிட்டனர்.
இதனை பரிசீலித்த நீதிபதி, கீழ் கோர்ட்டின் உத்தரவுக்கும் அங்கு நடைபெறும் வழக்கிற்கும் இடைக்கால தடை விதித்து, சூரியமூர்த்தி தனது பதிலை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். வழக்கு செப்டம்பர் 3க்கு ஒத்திவைக்கப்பட்டது.