டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) Z-பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.
பாஜக ஆளும் டெல்லி அரசின் முதல்-மந்திரியாக ரேகா குப்தா இருக்கிறார். இவர் வாரந்தோறும் புதன்கிழமை தனது வீட்டில் பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்பது வழக்கம். அதன்படி நேற்றும் பொதுமக்கள் குறைகளை கேட்டுக்கொண்டிருந்தார்.
முதல்-மந்திரி வீடு, ஷாலிமார் பாக்கில் உள்ளது. முதல்-மந்திரியிடம் குறைகளை தெரிவிக்க ஏராளமானோர் நேற்று காலை வந்திருந்தனர். அப்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் முதல்-மந்திரி முன்னால் வந்து தனது கைகளில் இருந்த காகிதங்களை கிழித்து முதல்-மந்திரி மீது வீசினார். தொடர்ந்து முதல்-மந்திரியின் கைகளைப் பிடித்து வேகமாக இழுத்தார்.
இதில் முதல்-மந்திரியின் தலை, அருகில் இருந்த மேஜை மீது மோதியது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. யாரும் எதிர்பாராத நேரத்தில், சில நொடிகளில் இது நடந்து முடிந்து விட்டது. உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டார். முதல்-மந்திரி ரேகா குப்தா, ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முதல்-மந்திரியை தாக்கிய நபர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கிம்ஜி சகாரியா (வயது 41) என்பதும், அவர் ஒரு நாய் பிரியர் என்பதும் தெரிய வந்தது. சமீபத்தில் தெருநாய்களுக்கு எதிராக வந்த கோர்ட்டு உத்தரவு அவரை மிகவும் பாதித்து இருந்தது. இதனால் மன நல பாதிப்பில் இருந்ததாகவும் தெரிகிறது. ராஜேசின் தாயாரும் இதனை போலீசில் தெரிவித்து உள்ளார்.
ஆனால் முதல்-மந்திரியின் வீட்டில் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகள், அவரது நடவடிக்கையை வேறுவிதமாக காட்டுகின்றன. அவர் திட்டமிட்டே இந்த தாக்குதலை நடத்தியதாக அந்த காட்சிகள் காண்பிக்கின்றன. 24 மணி நேரத்துக்கு முன்னதாகவே இந்த சதித்திட்டத்தை அவர் தீட்டிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) Z-பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் பாதுகாப்புக்காக சிஆர்பிஎஃப் பணியாளர்களுடன், டெல்லி போலீசாரும் நிறுத்தப்படுவார்கள். 24 மணி நேரமும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முதல்வரின் இல்லம் மற்றும் அலுவலகத்தைச் சுற்றி கூடுதல் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இசட்-பிரிவு பாதுகாப்பு என்பது மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பில் ஒன்றாகும், மேலும் பொதுவாக 20 க்கும் மேற்பட்ட பணியாளர்களின் பாதுகாப்பு, அருகிலுள்ள காவலர்கள், ஓட்டுநர்கள் மற்றும் எஸ்கார்ட் வாகனங்கள் ஆகியவை இதில் அடங்கும். இது அதிக அச்சுறுத்தல் உள்ள நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.