சென்னைக்கு வந்தால் தன்னம்பிக்கை வளரும்!

Estimated read time 0 min read
சென்னை நினைவுகள்:

எனது சொந்த ஊர் தேனி அருகே வடபுதுப்பட்டி. சுமாரான கிராமம். லைப்ரரி கிடையாது. போஸ்ட் ஆஃபிஸ் கிடையாது. இரண்டுக்கும் அருகே உள்ள இன்னொரு கிராமமான அன்னஞ்சிக்குத்தான் செல்ல வேண்டும்.

டவுன் பஸ் ஏறி ஏழு கிலோமீட்டர் போனால் தேனி. அதைத்தான் நகரம் என்று சிறிய வயதில் நினைத்திருந்தேன். கொஞ்சம் வளர்ந்து மதுரைக்கு அவ்வப்போது போக ஆரம்பித்ததும் மதுரைதான் நகரம் என்று வியந்தேன்.

எனது அளவுகோல்கள் மிகவும் எளிமையாக இருந்தன. அதாவது எங்களூரில் டவுன் பஸ் ஏறினால் அடுத்த ஊருக்குப் போகிறேன்.

ஆனால் மதுரையில் ஊருக்குள்ளேயே டவுன்பஸ்கள் ஓடுகின்றனவே.

எத்தாம் பெரிய நகரம் என்று புல்லரித்த அப்பாவியான நான் சென்னை வந்து பார்த்தால் இங்கே ஊருக்குள்ளே ரயில்கள் ஓடிக்கொண்டிருந்தன.

ஐ.ஐ.டியில் காலேஜுக்குள்ளேயே செல்ல பஸ் ஓடியது, அட இதுதாண்டா நகரம்! என்று வியப்புத் தோன்றியது.

முதல் முதலில் சென்னை வந்தது அனேகமாக 1984 ஆக இருக்கலாம். அண்ணன் ஒருத்தர் சென்னையில் படித்துக் கொண்டிருந்தார். எனக்கு வீஸிங்க் பிரச்சினை இருந்தது.

இங்கே யாராவது டாக்டரைப் பார்க்கலாம் என்ற யோசனையில் வந்தேன். அவர் என்னை மின்சார ரயிலில் அழைத்துச் சென்றார். குரோம்பேட்டையிலிருந்து மாம்பலம் வரை மின்சார ரயிலில் வந்த எனக்கு வியப்பாக இருந்தது.

எந்த விதமான அறிவிப்பும் விசில் சத்தமும் இல்லாமல் குறிப்பிட்ட இடங்களில் ரயில் நிற்கிறது.

அது நிற்கப் போவதற்கு முன்னமே ஜனங்கள் ஆயத்தமாக வாசலருகே போய் தயாராக, ரயில் மௌனமாக நிற்க, இவர்கள் பரபரவென்று இறங்க, அங்கே ஏற்கனவே காத்திருக்கும் மக்கள் விசுக் என்று ஏறிக்கொள்ள, ஒரே ஒரு பேங்க்க்க்க்…. ஒலியோடு வழுக்கினாற் போல நகரும் மின்சார ரயில்தான் சென்னை எனக்குத் தந்த முதல் வியப்பு.

உடன் வந்த அண்ணனிடம் கேட்டேன். ‘எப்படி இவங்க கரெக்டா ஏறி இறங்கறாங்க’ என்று. ‘எல்லாம் பழக்கம்தான் நீயும் கொஞ்ச நாள் இருந்தா தெரிஞ்சிரும்’ என்றார்.

அதன் பின் மூன்று நாட்களில் ஆறேழு தடவைகள் அதே ரூட்டில் போய்வர எனக்கு சைதாப்பேட்டை, கிண்டி, பல்லாவரம் என்று அடையாளங்கள் புலப்படத் துவங்கின.

அப்போது மாம்பலத்தில் இறங்கி வடக்கு உஸ்மான் ரோட்டுக்கு நடந்து வந்தது நினைவிருக்கிறது. இப்போது அப்பகுதியில் இருக்கும் நெரிசலோடு ஒப்பிட்டால் அன்று இருந்த கூட்டம் வெகு சாதாரணம். ஆனால் எனக்கு அதுவே அசௌகரியமாக இருந்தது.

நான் பார்த்த டாக்டர் ஒரு வினோதமான மனிதர். ஒவ்வொரு வாக்கியத்தை முடிக்கும் போதும் சிரித்துக் கொண்டிருந்தார். அவர் வீசிங்க் பிரச்சினைக்கு சொன்ன சிகிச்சை அவரைப் போலவே வினோதமானது. காந்தச் செயின் ஒன்றை அவர் மெடிகல் எஃபெக்ட் ஏற்றி என்னிடம் தருவார்.

அதனை அணிந்து கொண்டு விட்டால் போதும். என் பிரச்சினை கண்காணாமல் போய்விடும் என்று உறுதியளித்தார். 84 லேயே அவர் அதற்கு கேட்ட தொகை ஆயிரம் ரூபாய் என நினைவு. நான் மிரண்டு போனேன்.

சென்னை எல்லோரையும் ஏமாற்றும் என்று நான் பார்த்த சினிமாக்கள் சொன்னது நிஜம்தான் போலிருக்கிறது என்று நம்பிக்கொண்டு ஊருக்கு ஓடி விட்டேன்.

அதன் பின்பு சென்னை வந்தது, 1990 ம் ஆண்டு சட்டம் படிக்க. நுழைவுத் தேர்வு எழுதிய எனக்கு சென்னை சட்டக் கல்லூரியில் இடம் கிடைத்திருந்தது.

எல்லோரும் அதை அரிய வாய்ப்பு என்று சொன்னார்கள். எனக்கோ மதுரையில் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று ஒரே வருத்தம்.

அட்மிஷனுக்கு சென்னை கிளம்பினேன். அப்போது திருவள்ளுவர் பேருந்து. தேனியிலிருந்து மொத்தம் மூன்றே பஸ்கள்தான் சென்னை வரும். அதில் வந்து இறங்கினேன். மாநகரம் வெருட்டியது.

எனது ஒரே ஆறுதல் என் நெருங்கிய நண்பன், கல்லூரித் தோழன் ரமேஷ் வைத்யா தனது அண்ணனுடன் கொரட்டூரில் தங்கியிருந்தான்.

அவனது அண்ணன் ரயில்வேயில் வேலை பார்த்தார். அவர் தனது மூன்று நண்பர்களுடன் கொரட்டூரில் தனி வீடு எடுத்திருந்தார்.

ரமேஷ் அவருடன் தங்கி வேலைக்கு முயன்று கொண்டிருக்க நான் ரமேஷின் நண்பனாக அந்த அறையில் தங்கிக் கொண்டேன்.

தினமும் காலையில் ரயில் ஏறி சென்ட்ரல் வந்து அங்கிருந்து பாரிஸில் இருக்கும் கல்லூரிக்கு நடந்து வருவது வழக்கமானது. அப்போது மூர் மார்க்கெட் எரிந்து சில வருடங்களாகி இருந்தது.

சென்ட்ரலில் இப்போதிருக்கும் புறநகர் ரயில் நிலையத்துக்கு முன்னே எரிந்து போன மூர்மார்க்கெட்டின் மாதிரி ஒன்றை செய்து மினியேச்சராக வைத்திருந்தார்கள்.

எனக்கு ஏனோ அதைப் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருந்தது. அப்போது பல நாட்கள் சீக்கிரமே கிளம்பி சென்ட்ரல் வந்து விடுவேன்.

கல்லூரிக்குப் போகவே பிடிக்காது. வெளியே வந்து அந்த மூர் மார்க்கெட் மினியேச்சரை தினமும் சோகத்துடன் பார்ப்பேன்.

எரிந்து போன மூர்மார்க்கெட் வியாபாரிகளுக்கான புதிய வளாகம் அப்போது கட்டப்பட்டிருக்கவில்லை.

எனவே, அந்த வியாபாரிகள் எல்லாம் இடது பக்கம் இருந்த வெட்டவெளியில் சந்தை மாதிரி கடை போட்டு பல வினோதமான அயிட்டங்களை விற்றுக் கொண்டிருப்பார்கள். அதனை வெகுநேரம் வேடிக்கை பார்த்து விட்டுதான் கல்லூரி போவேன்.

கிராமத்திலிருந்து சென்னை மாதிரியான பெருநகரத்துக்கு வரும் என் போன்றவர்களுக்கு முதலில் ஏற்படுவது மிரட்சிதான். ஜனக்கூட்டம் பார்த்து மிரட்சி. இத்தனை ஜனங்களை ஒரு சேரப் பார்க்கையில் பிரமிப்பாகவும் அச்சமாகவும் இருந்தது.

வேக வேகமாக போய் வந்து கொண்டிருக்கும் அந்த மனிதர்கள் அனைவரும் நகரத்தில் முக்கியமானவர்கள் என்றும் நான் மட்டுமே இந்த ஊருக்கு அந்நியப்பட்டவன் என்றும் தோன்றியது.

என்னைத் தவிர எல்லோருமே சென்னையை நன்கு அறிந்தவர்கள். எந்த பஸ்ஸில் ஏற வேண்டும்? எங்கு இறங்க வேண்டும் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.

எனக்குத்தான் வடபழனி என்று போட்டிருக்கும் பஸ் வடபழனியிலிருந்து வருகிறதா? இல்லை வடபழனிக்குச் செல்கிறதா என்று தெரியாத அவலம். ஒவ்வொரு நாளும் இந்த குமைச்சல் அதிகரித்துக் கொண்டிருந்தது.

இந்த ஊரை அறிந்து கொள்வதுதான் எனது தன்னம்பிக்கையை வளர்க்கும் என்று மனதில் தோன்ற அப்போதிருந்த முப்பது ரூபாய் பஸ் பாஸ் ஒன்றை வாங்கிக் கொண்டேன்.

எங்கு வேண்டுமானாலும் ஏறி, இறங்கலாம் எனும் வழிவகை கொண்ட பஸ் பாஸ் அது. அதை வாங்கிக் கொண்டு கன்னாபின்னா என்று சென்னையை சுற்றினேன்.

நீச்சலுக்கு இறங்குபவன் தண்ணீரை உடலுக்கு முதலில் பரிச்சயப்படுத்திக் கொள்வதைப் போல சென்னையின் இடங்களை அறிந்து கொள்வதே அச்சம் தீர ஒரே வழி. மெல்ல மெல்ல எனக்கு இடங்கள் பிடிபட்டு மிரட்சி அகலத் துவங்கியது.

மெல்ல மெல்ல சென்னை எனக்குப் பரிச்சயமானது. எந்த ஒரு இடமும் அங்கிருக்கும் மனிதர்களுடன் நமக்கு ஏற்படும் உறவைப் பொறுத்தே இனிமையானதானதாக மாறுகிறது. கல்லூரியில் படிக்கும்போதே சென்னையின் எல்லா பகுதிகளிலும் சுற்றத் துவங்கினேன்.

சென்னையில் எனக்கு மிகவும் பிடித்தது நகரிலிருக்கும் பழமையான கட்டிடங்கள்தான். நான் படித்த சட்டக் கல்லூரி வளாகம் ஒரு அற்புதமான கட்டிடம். வெளியே வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தாலும் வகுப்பறைக்குள் வெம்மை தாக்காத ஒரு கட்டடக் கலை.

ஆர்மீனியன் சர்ச், மியூசியம், எக்மோர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் தற்போது புற்களும் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு அழகாய்த் தெரியும் சென்னையில் முதல் முதலில் சினிமா காண்பித்த கட்டிடம்.

ஓவியக் கல்லூரி என்று சென்னையின் சிறப்பான அழகே இந்த கட்டிடங்களால்தான் என்று தோன்றுகிறது.

90 ல் மாணவனாக வந்த நான் 97 ல் விகடனில் வேலை கிடைத்த பின்பு நிரந்தர சென்னைவாசியாகிவிட்டேன்.

பேச்சிலராக வீடு எடுத்து தங்குவது, திருவல்லிக்கேணி மேன்ஷன் வாழ்க்கை, பிறகு சிங்கிள் பெட்ரூம் குடும்ப வாழ்வு என்று பலவிதமாக இருந்து பார்த்தாயிற்று.

மேன்ஷன் வாழ்க்கையின் போது திருவல்லிக்கேணி தெருக்களும், சேப்பாக்கம் ஸ்டேடியமும், மெரினா பீச்சும் எனக்கு மிகவும் பிடித்தவை.

இத்தனை ஆண்டுகளில் சென்னையின் முகம் மிகவும் மாறி விட்டது. வேலைக்குச் சேர்ந்த புதிதில் கோடம்பாக்கம் பவர்ஹவுஸில் ஆட்டோ ஏறி மீட்டர் போட்டு இருபத்தெட்டு ரூபாய்க்கு டிவிஎஸ் பஸ்ஸ்டாப்பில் இருக்கும் விகடன் ஆஃபிசுக்கு வந்த நினைவு இன்னும் பசுமையாக இருக்கிறது.

விலைவாசி, ஜனநெரிசல், வாகனங்கள், டிராஃபிக் எல்லாமே மிகவும் அதிகரித்து விட்டன. தன் கொள்ளளவை மீறி சென்னை திணறிக் கொண்டு இருக்கிறது.

தமிழகத்தின் அனைத்து ஊர்களிலிருந்தும் குறைந்தது ஒருவராவது சென்னையில் இருக்கிறார்கள்.

இத்தனை ஜனப் பெருக்கம் சரியா எனும் கேள்வி எழுகிறது. ஆனால் கிராமங்களின் வாழ்வாதரம் பலவீனமாகி வருகையில் இது தவிர்க்க முடியாது என்பதும் புரிகிறது.

சமீபத்தில் ஒரு நாள் சென்ட்ரல் போனபோது கல்லூரி நினைவுகள் சூழ்ந்தன. எத்தனை நாட்கள் இந்த சென்ட்ரலில் ஓரமாக அமர்ந்துகொண்டு கூட்டம் கூட்டமாய் ரயிலுக்கு ஓடும் மனிதர்களைப் பார்த்து மிரண்டிருக்கிறேன்.

இப்போது நானும் அவர்களில் ஒருவனாக உணர்கிறேன். சென்னை முதல் பார்வைக்கு அச்சுறுத்தலாம். வெருட்டலாம். ஆனால் பழகிய பின்பு சென்னை மிகவும் இனிமையானது.

எல்லாவிதமான மனிதர்களுக்குமான இயங்குவெளியாக அது இருக்கிறது. எனவே தினம் தினம் அது மனிதர்களைத் தன்பால் ஈர்த்தவண்ணம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

நன்றி: பேஸ்புக் பதிவு

Please follow and like us:

You May Also Like

More From Author