ஜூலை நடுப்பகுதியில் நிறைவடைந்த 2024-25 நிதியாண்டில் சீனாவிலிருந்து நேபாளம் இறக்குமதி செய்த முதல் ஐந்து தயாரிப்புகளில் தொலைத்தொடர்பு சாதனங்கள், ஆயத்த ஆடைகள், இயந்திரங்கள் மற்றும் பாகங்கள், ஜவுளி மற்றும் மின்சாரப் பொருட்கள் இடம்பெற்றுள்ளதாக மத்திய வங்கி அண்மையில் தெரிவித்துள்ளது.
இக்காலகட்டத்தில் சீனாவிலிருந்து நேபாளத்தின் மொத்த இறக்குமதி 34,110 கோடி நேபாள ரூபாயாக இருந்தது. மேலும், நேபாளம் இறக்குமதி செய்த முதல் ஐந்து தயாரிப்புகள் 37 விழுக்காடு வகித்துள்ளதாக நேபாள ராஸ்ட்ரா வங்கி வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு சாதனங்கள் 3073 கோடி நேபாள ரூபாயுடன் முதலிடம் பிடித்தது. மேலும், இறக்குமதி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள் மட்டும் 2491 கோடி நேபாள ரூபாயாக இருந்தன.
நேபாளம் சீனாவிலிருந்து 2808 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயத்த ஆடைகள், 2390 கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் மற்றும் பாகங்கள், 2197 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளி மற்றும் 2134 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சாரப் பொருட்களை இறக்குமதி செய்ததாக நேபாள ராஸ்ட்ரா வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவிற்குப் பிறகு நேபாளத்தின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக சீனா நீண்ட காலமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.