உலகின் மிகப்பெரிய பொது போக்குவரத்துத் துறையாக இந்திய ரயில்வே துறை செயல்பட்டு வருகிறது.
தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களை உள்ளடங்கிய தெற்கு ரயில்வே சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ரயில்கள் இயக்கம், தொழில்நுட்பம், வணிகப் பிரிவு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 90 ஆயிரம் மேற்பட்ட ஊழியர்கள் தெற்கு ரயில்வே பிரிவில் பணிபுரிந்து வருகின்றனர். தெற்கு ரயில்வேயில் தென் மாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அதிகமாக இருந்தாலும், இந்தி பேசும் வட மாநில ஊழியர்களும் சரிபாதி அளவுக்கு இருக்கிறார்கள்.
தமிழகத்தின் ரயில்வே கவுண்டர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், கேட் கீப்பர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தமிழ் தெரியாத வட மாநில ஊழியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். டிக்கெட் கவுண்டர்களில் உள்ள பணியாளர்கள் இந்தியில் பேசுவதால் தமிழக பயணிகள் டிக்கெட் எடுப்பதில் சிரமத்தை சந்தித்து வருவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றனர். இதனையடுத்து, மக்களிடம் நேரடியாக தொடர்பில் உள்ள ரயில்வே ஊழியர்கள் உள்ளூர் மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தெற்கு ரயில்வேயின் அலுவலகப் பணிகளில் இந்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது சிறு சிறு குறிப்புகள் கூட இந்தியில் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அனைத்து துறை தலைவர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், “ அலுவலகப் பணிகளில் இந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க செப்டம்பர் 19ஆம் தேதி வரை சிறப்பு முன்னெடுப்புகள் எடுக்கப்பட வேண்டும். கடித பரிமாற்றங்களில் இந்தியை பயன்படுத்த வேண்டும். துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்களில் இந்தி பயன்பாடு குறித்து ஆய்வு செய்து அறிகுறித்து இந்தி துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
அத்துடன், தெற்கு ரயில்வே அறிவிப்புகள், ஒப்புதல், ஏற்பு, அனுமதி, முன் முடிவு உள்ளிட்ட வார்த்தைகள் இந்தியில் குறிப்பிட வேண்டும், பெரும்பாலானோர் இந்த முன்னெடுப்பில் பங்கேற்பதை உறுதி செய்வது அவசியமாகும்” என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தி பெரும்பாலும் பேசப்படாத மாநிலங்களில் இது போன்ற நடைமுறைகள் என்பது தொடர்ந்து மக்களுக்கு ஒரு ரயில்வே ஊழியர்களை தொடர்புகொள்வதில் சிக்கல்களையே ஏற்படுத்தும். ஏற்கனவே இந்தி திணிப்புக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் உள்ள நிலையில், இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதால் தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்தி பயன்பாடு கட்டாயப்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.