ஜம்மு காஷ்மீரில் மீண்டும் ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் உள்ள மக்களை ராணுவம் மீட்டு வருகிறது. கனமழை மற்றும் வெள்ளத்தால் செல்போன் மற்றும் இணைய சேவை உள்ளிட்டவை முடங்கியதால் மக்கள் தவித்துவருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் கனமழை பெய்துவருவதால், வைஷ்ணவி தேவி கோவிலுக்கான யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்யும் என்பதற்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளதால், முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு உருவான காட்டாற்று வெள்ளத்தால் 15க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் தண்ணீர் அபாய எல்லையைத் தாண்டிச் செல்கின்றன.