உத்தரப்பிரதேச மாநிலத்தின் புலந்த்சாகர் மாவட்டத்தில், ஒரு சாதாரண மளிகை கடை நடத்தும் நபருக்கு, ரூ.141.25 கோடி வருமானம் என கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதனால் அந்தக் கடைக்காரர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புலந்த்சாகர் மாவட்டம் குர்ஜா நகரம் அருகே நயாகஞ்ச் பகுதியில் வசிக்கும் சுதிர் என்ற நபர், தனது வீட்டுடன் இணைந்த ஒரு சிறிய மளிகை கடையை நடத்தி வருகிறார். அவருக்குச் சமீபத்தில் வந்த வருமான வரி துறையின் நோட்டீசில், 2025 ஜூலை மாதத்தில்தான் அவரது கடையில் மட்டும் ரூ.141.25 கோடி மதிப்பில் விற்பனை நடந்ததாக பதிவுகள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைக் கண்ட சுதிர் திகைத்துப் போய், உடனடியாக குர்ஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து சுதிர் கூறுகையில், “டெல்லியில் செயல்பட்டு வந்த ஆறு தனியார் நிறுவனங்கள், எனது பான் கார்டை போலி முறையில் பயன்படுத்தி இருக்கின்றன. இதுபோன்ற அனுபவம் எனக்கு ஏற்கனவே 2022-ம் ஆண்டிலும் ஏற்பட்டது. அப்போது நான் வருமான வரித்துறைக்கு தெளிவுபடுத்தியும், எனக்குதொடர்பு இல்லை என்பதையும் கூறினேன். ஆனால் இப்போது மீண்டும் இதே மாதிரியான பிரச்சனை ஏற்பட்டுள்ளது” என வேதனையுடன் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம், ஒரே நபரின் பான் கார்டு மூலம் பல நிறுவனங்களை பதிவு செய்து, கடும் வருமானத்தை காட்டி அதன் மூலம் முன்மாதிரியாக வரிவிலக்கு பெற முயற்சிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறையும், போலீசாரும் சேர்ந்து ஆழமான விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.