பாஜகவுக்கு போடும் ஒவ்வொரு வாக்கும் கேரளாவின் பண்பாட்டை அழித்துவிடும்- பினராயி விஜயன் பேச்சு!

Estimated read time 1 min read

கேரளா : முதலமைச்சர் பினராயி விஜயன், எர்ணாகுளத்தில் செப்டம்பர் 11, 2025 அன்று நடந்த “மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சியின் எதிர்காலம்” கருத்தரங்கில், பாஜகவின் அரசியல் மற்றும் கலாச்சார நோக்கங்கள் குறித்து கடுமையாக எச்சரித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சமீபத்திய கேரள பயணத்தை குறிப்பிட்டு, “அமித் ஷா, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 25% வாக்குகளையும், 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையையும் பாஜக இலக்காகக் கொண்டுள்ளதாக கூறினார்.

இது, கேரளத்தை பாஜகவின் முக்கிய இலக்காக மாற்றியுள்ளது,” என்று பினராயி தெரிவித்தார். பாஜக, கேரளத்தின் கலாச்சார அடையாளத்தை மாற்ற முயல்வதாக பினராயி குற்றம்சாட்டினார். “ஓணம் பண்டிகையின்போது, ஒருவர் எனக்கு ஒரு படத்தைக் காட்டினார். அதில், மகாபலி மன்னரை வாமனனின் காலடியில் சித்தரித்து, மகா விஷ்ணுவை உயர்த்திக் காட்டியிருந்தனர். மகாபலி நம்மைப் பார்க்க வருவதாக கொண்டாடப்படும் ஓணத்தை, பாஜக பழைய நம்பிக்கைகளுக்கு மாற்ற முயல்கிறது,” என்று அவர் கூறினார்.

இந்த முயற்சி, கேரளத்தின் தனித்துவமான பாரம்பரியத்தை சீர்குலைப்பதற்கான முயற்சியாக அவர் விவரித்தார்.“பாஜகவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும், கேரளத்தின் கலாச்சாரத்தை அழிக்கும் ஆற்றல் கொண்டது,” என்று பினராயி எச்சரித்தார். “மக்கள் தங்கள் வாக்குகளை அளிக்கும்போது, அதன் விளைவுகளை உணர வேண்டும். அரசியல்வாதிகள் மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனும் இதை புரிந்து கொள்ள வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

கேரளத்தின் மதச்சார்பற்ற தன்மையையும், பண்பாட்டு மரபுகளையும் பாதுகாக்க, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கேரளத்தின் மரபுகளையும், கூட்டாட்சி உரிமைகளையும் பாதுகாக்க, பாஜகவின் முயற்சிகளை மக்கள் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என்று பினராயி அழைப்பு விடுத்தார். “ஓணம் போன்ற பண்டிகைகளை மாற்றி, கேரளத்தின் அடையாளத்தை அழிக்க பாஜக முயல்கிறது. இதை அனுமதிக்க முடியாது. மதச்சார்பின்மையையும், கூட்டாட்சி உரிமைகளையும் பாதுகாக்க, அனைவரும் ஒருமித்து செயல்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். இந்த உரை, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இடதுசாரி முன்னணியின் (LDF) அரசியல் உத்திகளை வலுப்படுத்துவதற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author