முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் (CUMTA) 2வது ஆணையக் கூட்டத்தில் சென்னைப் பெருநகரப் பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதில், சென்னைப் பெருநகரப் பகுதியான 5,904 சதுர கி.மீ பரப்பளவுக்கான விரிவான போக்குவரத்து திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த 25 ஆண்டுகளில் சென்னையில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த 2.24 லட்சம் கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை வசதிகளை பொறுத்தவரையில் 621 கிலோமீட்டர் நிலத்திற்கு சாலைகளை மேம்படுத்த வேண்டு என்றும், 416 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என்றும், 97 கிலோ மீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட சாலைகள் அமைக்க வேண்டும் 75 போக்குவரத்து சந்திப்புகள் புதிதாக அமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர பேருந்துகளை பொறுத்தவரையில் அடுத்த 25 ஆண்டுகளில் கூடுதலாக சுமார் 6000 பேருந்துகளை இணைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவையை பொறுத்தவரையில் புதிதாக 444 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்க வேண்டும் என்றும், 152 கிலோ மீட்டர் நீளத்திற்கு லைட் மெட்ரோ சேவையும், 124 கிலோமீட்டர் நீளத்திற்கு பஸ் ரேப்பிட் ட்ரான்சிஸ்ட் என்ற போக்குவரத்து அமைப்பையும் உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில்களை பொருத்தவரையில் புதிதாக 182 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்க வேண்டும் என்றும், 126 கிலோமீட்டர் நீளத்தில் உள்ள புறநகர் ரயில் வழித்தடத்தை மேம்படுத்த வேண்டுமென்றும் புதிதாக 190 ரயில் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து சென்னையில் இருந்து நெல்லூர், தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் ஆகிய வழித்தடத்தில் ஆர்ஆர்டி எஸ் என்று அழைக்கப்படும் மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பை உருவாக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது