தெருக்கூத்து நடக்கிறது, கோமாளி(பஃபூன்) உள்ளிட்ட நிறைய வேடங்கள் இருக்கும், அனைவரும் வேடிக்கை பாருங்கள் என பாமக சட்டமன்ற கட்சித் தலைவராக ஜி.கே.மணியை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கை குறித்தான கேள்விக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்தார்.
சென்னை, கோட்டூர்புரம் இல்லத்தில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் அபிராமபுரம் இல்லத்திற்கு சென்றார்.முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “தெருக்கூத்தில் பல வேடங்களில் பல நடிகர்கள் வருவார்கள். அவ்வாறு ஒரு தெருக்கூத்து நடக்கிறது, நீங்களும் பாருங்கள். தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டுள்ள ஆவணங்கள், கூட்டணி தொடர்பான சந்திப்பு டெல்லியில் நடந்துள்ளதா என்பதெல்லாம் பரம ரகசியம். பாமகவில் இரு தரப்பு என்பதே கிடையாது.
ஒரு கும்பல் என்ன என்னமோ கூறி ஏமாற்றி வருகின்றனர். தேர்தல் வரைக்கும் பாமகவின் உட்கட்சி பிரச்சினை செல்லாது. பாமக தொண்டர்கள் தெளிவாக உள்ளனர். மாவட்ட செயலாளர்கள் உடன் ஆலோசனை நடத்தி உள்ளோம். பாமக தொண்டர்கள் அனைவரும் தெளிவாகவே உள்ளனர்” என்றார்.
பாமக சட்டமன்ற கட்சித் தலைவராக ஜி.கே.மணியை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கை குறித்தான கேள்விக்கு தெருக்கூத்து நடக்கிறது. அன்புமணியின் கூட்டம் பஃபூன் கூட்டம், பஃபூன் உள்ளிட்ட நிறைய வேடங்கள் இருக்கும். அனைவரும் வேடிக்கை பாருங்கள். கூட்டணி குறித்து நான் தான் முடிவெடுப்பேன். வெகு விரைவில் அதுகுறித்து அறிவிப்பேன் என ராமதாஸ் தெரிவித்தார்.