பிரதமர் நரேந்திர மோடி வரும் 4ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
என மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிப்ரவரி 27ஆம் தேதி பல்லடம் வந்தார். இதனைத்தொடர்ந்து மதுரை, தூத்துக்குடி, நெல்லையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.
இந்நிலையில் மீண்டும் பிரதமர் மோடி வரும் 4-ந்தேதி (திங்கட்கிழமை) தமிழகம் வருகிறார். தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வருகிறார்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு செல்கிறார். அங்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரூ.400 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள விரைவு எரி பொருள் மறுசுழற்சி உலையை தொடங்கி வைக்கிறார்.
பின்னர் சென்னை வரும் பிரதமர் மோடி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.