ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு பெரும் அதிர்வலையை கிளப்பியது. கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகளாக வந்த 26 பேர் இடத்தில் உயிரிழந்தனர். இந்த கொடூரச் செயலை உலக நாடுகளும் கண்டித்த நிலையில், இந்தியா கடும் பதிலடி கொடுக்கத் திட்டமிட்டது.
இதையடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பல பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பதிலடி தாக்குதலுக்குப் பின்னர், பதற்றத்தில் சிக்கிய பாகிஸ்தான், இந்திய எல்லையை நோக்கி ட்ரோன் தாக்குதலுக்கு முயன்றது. ஆனால் இந்திய பாதுகாப்புப் படைகள் அதையும் தடுக்கத் தீர்க்கமான நடவடிக்கைகள் எடுத்தன.
மூன்று நாட்கள் நீடித்த இந்த பதற்றமான தாக்குதல்களில், பாகிஸ்தானுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டு, நிலைமை நிரூபிக்க முடியாத வகையில் ஆனது. பின்னர், பாகிஸ்தான் தானே சண்டையை நிறுத்துமாறு இந்தியாவிடம் வேண்டிக் கொண்டது. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிக சண்டை நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் வந்தது.
இந்த பின்னணியில், பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கு கடும் பாடம் புகட்டும் வகையில், இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும், பாகிஸ்தானுடன் உள்ள வர்த்தக உறவுகளையும் முற்றிலும் ரத்து செய்தது. இது பாகிஸ்தானின் பொருளாதாரத்தை நிலைகுலைய வைத்தது.
தற்போதும் இந்த தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் இருக்கும் பாகிஸ்தான், மீண்டும் சச்சரவுக்கு இடமளிக்க, அதன் பாதுகாப்புத் துறை அமைச்சர் காவ்ஜா ஆசிப் ஆத்திரமூட்டும் வகையில், “இந்தியாவுடன் மீண்டும் போர் ஏற்படலாம். இந்த முறை நம்மிடம் வெற்றி நிச்சயம்” என அடாவடியாக பேசியுள்ளார்.