இங்கிலாந்து புறப்பட்டார் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்..!

Estimated read time 1 min read

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 2 நாள் அரசுமுறை பயணமாக 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் நேற்று முன்தினம் மும்பை வந்தடைந்தார். நேற்று பிரதமர் மோடியும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் மும்பையில் பிரதிநிதிகள் மட்ட சந்திப்பை நடத்தினர்.

இதனை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, “பிரதமர் ஸ்டார்மரின் தலைமையின் கீழ், இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. ஜூலை மாதம், எனது இங்கிலாந்து பயணத்தின் போது, வரலாற்று சிறப்புமிக்க விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் (விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம்), இரு நாடுகளுக்கும் இடையிலான இறக்குமதி செலவு குறையும். இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். வர்த்தகம் அதிகரிக்கும். இதனால் நமது தொழில்கள் மற்றும் நுகர்வோர் பயனடைவார்கள். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மாதங்களுக்குள், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வணிகக் குழு உங்களுடன் வருவதால், நீங்கள் இந்தியாவிற்கு வருகை தருவது, இந்தியா-இங்கிலாந்து கூட்டாண்மையில் புதிய வீரியத்தின் அடையாளமாகும்.

இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மிகப்பெரிய வணிகத் தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்தியா-இங்கிலாந்து ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகள் மற்றும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்தியாவும் இங்கிலாந்தும் இயற்கையான கூட்டாளிகள். ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற மதிப்புகளில் பரஸ்பர நம்பிக்கை நமது உறவுகளின் அடித்தளத்தில் உள்ளது. உலகளாவிய ஸ்திரமின்மையின் தற்போதைய சகாப்தத்தில், இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான வளர்ந்து வரும் கூட்டாண்மை உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய அடித்தளமாக இருந்து வருகிறது.

நேற்றைய கூட்டத்தில், இந்தோ-பசிபிக், மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை மற்றும் உக்ரைன் மோதல் குறித்து விவாதித்தோம். உக்ரைன் மோதல் மற்றும் காசா பிரச்சினைகளில், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், கடல்சார் பாதுகாப்பை அதிகரிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்று கூறினார்.

இந்நிலையில், 2 நாட்கள் இந்திய பயணத்தை நிறைவு செய்த பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நேற்று இரவு இங்கிலாந்து புறப்பட்டு சென்றார். மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் ஸ்டார்மர் இங்கிலாந்து புறப்பட்டு சென்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author