முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-I மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-I ஆகிய பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று நடத்திய தகுதித் தேர்வை 2.20 லட்சம் தேர்வர்கள்(93.18%) எழுதியுள்ளனர்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள அரசுப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-I மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-I ஆகிய பணிகள் சார்ந்த 1996 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்-216, ஆங்கிலம்-197, கணிதம்-232, இயற்பியல்-233, வேதியியல்-217, தாவரவியல்-147, விலங்கியல்-131, வணிகவியல்-198, பொருளியல்-169, வரலாறு-68, புவியியல்-15, அரசியல் அறிவியல்-14, கணினி பயிற்றுனர் நிலை(1)- 57 மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை(1)- 102 ஆகிய 14 பாடங்கள் சார்ந்த 1996 காலிப்பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக ஜூலை10 முதல் ஆக.12 வரை 2,36,530 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 1,73,410 ஆண்கள், 63,113 பெண்கள் மற்றும் 7 மூன்றாம் பாலினத்தவர் ஆவர். குறிப்பாக, 3,734 மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனர். 856 தேர்வர்கள் Scribe உடன் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இவர்களுக்கான தகுதி தேர்வு இன்று மாநிலம் முழுவதும் 809 தேர்வு மையங்களில் நடைபெற்றது. காலை 10.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை பொதுப்பிரிவினருக்கும், காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாற்றுத்திறனாளிகளுக்கும் தேர்வு நடைபெற்றது. தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு வரத்தொடங்கினர். சிலர் முன்கூட்டியே தேர்வு மையத்தின் வாசலில் குழந்தைகளுடன் காத்திருந்தனர். காலை 9. 30 பிறகு தேர்வு மையத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தேர்வர்கள் முன்னிலையில் விடைத்தாள்கள் பிரிக்கப்பட்டு, விடைத்தாள் கட்டுகள் மீது கண்காணிப்பாளர்கள் கையொப்பம் பெற்றனர். தேர்வறைக்குள் செல்போன் ,எலக்ட்ரானிக் பொருட்கள், எலக்ட்ரானிக் கைக்கடிகாரம், கால்குலேட்டர், கையேடுகள் போன்றவை அனுமதிக்கப்படவில்லை. தேர்வு நடைபெறுவதை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி தேர்வு கட்டுப்பாட்டு மையத்திலிருந்து அதிகாரகள் கண்காணித்தனர்.
இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தகவலில், 1996 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக 2,36,530 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 1,73,410 பெண்கள், 63,113 ஆண்கள் மற்றும் 7 மூன்றாம் பாலினத்தவர் ஆவர். குறிப்பாக, 3,734 மாற்றுத் திறனாளிகளும் விண்ணப்பித்திருந்தனர்.
இன்று நடைபெற்ற தேர்வில் மாநிலம் முழுவதும் 809 தேர்வு மையங்களில் 2,20,412 தேர்வர்கள் வருகை புரிந்து தேர்வு எழுதிள்ளனர். 16,118 தேர்வர்கள் தேர்விற்கு வருகை புரியவில்லை ஒட்டுமொத்தமாக மாநில அளவில் 93.18 சதவீதம் தேர்வர்கள் தேர்வு எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.