‘டியூட்’ – இந்தத் தலைமுறைக்கு ‘கியூட்டா’ தெரிகிறாரா?

Estimated read time 1 min read
DUDE ஒருவனுக்கு (பிரதீப் ரங்கநாதன்) மாமன் மகள் ஒருத்தி (மமிதா பைஜூ) இருக்கிறாள்.

பால் வளத்துறை அமைச்சரான (சரத்குமார்) அந்த மாமாவின் ஒரு தங்கை இறந்து விட, இன்னொரு தங்கைதான் DUDE -ன் அம்மா (ரோகினி).
இப்படி ஒரு சூழலில், மாமன் மகள் காதலைச் சொல்ல, ”உன்னைக் காதலியாகப் பார்க்க முடியவில்லை. ஒன்லி நட்புதான்” என்கிறான் DUDE.
மனதளவில் இற்றுப்போகும் அவள், இதற்கு மேல் அவனைப் பார்த்துக் கொண்டு ஏங்கி சாக முடியாது என்று வெளியூருக்குப் படிக்கப் போய்விடுகிறாள்.
DUDE-க்கு ஒரு விபத்து நடந்து, அவன் உயிராபத்துக்கு போன நிலையில், அவள் ஞாபகம் வர, பிழைத்த உடன் அவளைக் காதலிப்பதை உணர்கிறான் DUDE.
ஆனால், அதற்குள் அவள் இன்னொருவனைக் காதலிக்க ஆரம்பித்து விடுகிறாள். அதை அவள் DUDE-டிடம் சொல்ல, தன் காதலை DUDE மறைக்கிறான்.
DUDEக்கும் தனது மகளுக்கும் கல்யாணம் நிச்சயம் செய்கிறார் அமைச்சர்.
மாமா மகனின் காதலுக்கு உதவலாம் என்று பார்த்தால் அந்தக் காதலன் வெத்து பில்டப் ஆள். எனினும் இருவரின் காதலும் உண்மை.
மகள் அமைச்சரிடம் காதலைச் சொல்ல, வேறு சாதி ஆள் என்பதால் மறுத்து விடும் மகளிடம் ஓர் அதிர்ச்சியான உண்மையைச் சொல்லி மிரட்டி, DUDE-ஐதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிறார் அமைச்சர்.


இருவரையும் வெளிநாடு அனுப்பி விடுவோம் என்று DUDE திட்டமிட, மாமன் மகள் இரண்டு மாத கர்ப்பம். காரணம் அந்தக் காதலன். அதனால் விசா மறுக்கப்படுகிறது.
கருவைக் கலைக்க முடியாத உடல் நலச் சிக்கல் அவளுக்கு.
எனவே வேறு வழி இல்லாமல் காதலனால் கர்ப்பம் ஆன மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்கிறான் DUDE.
குழந்தை பிறந்ததும் டைவர்ஸ் கொடுத்து காதலனையும் மாமன் மகளையும் ஃபாரினுக்கு அனுப்பி விட திட்டமிடுகிறான் DUDE.
ஒரு நிலை வரை காமெடி முகம் காட்டும் சீரியஸ் அரசியல்வாதி மாமாவுக்கு விஷயங்கள் தெரியவர நடந்தது என்ன என்பதே இந்த படம்.
DUDE ஆக பிரதீப் ரங்கநாதன். தனது முந்தைய படங்களான லவ் டுடே, டிராகன் பாணியிலேயே பரபரப்பாக, ஸ்டைலாக இளைஞர்களால் ரசிக்க முடிகிற நாடகத் தன்மையோடு நடித்துள்ளார்.
ஏமாற்றத்தின் வலியைக் காட்டிக் கொள்ளாமல் உள்ளுக்குள் புகைத்துக் கொண்டு பிரச்னைகளை எதிர்கொள்வதும், ஒரு நிலையில் உடைந்து அழுவதும் நெகிழ்ச்சி.
சுயநலவாதி என்று நினைக்க வைக்கிற கேரக்டரில் அட்டகாசமாக நடித்து இருக்கிறார் மமிதா பைஜூ.
ஆரம்ப அப்பாவி நடிப்பு, அப்புறம் எடுக்கும் வில்லத்தனம், அதன் விளைவான உருக்கம் என்று, பிரம்மாதமாக ஸ்கோர் செய்து இருக்கிறார் சரத்குமார்.
காலகாலமாக தமிழ் சினிமாவில் ஊறிக் கிடந்த தாலி செண்டிமெண்டை அந்தத் தாலியை வைத்தே கலாய்த்திருக்கிறார் இயக்குநர் கீர்த்தி வாசன்.
படத்தின் சில பிராங்க்ஸ் ஐடியாக்கள் காட்சியாகவும் மாண்டேஜஸ் எனப்படும் காட்சித் துண்டுகளாகவும் அசத்துகின்றன. அவற்றை வைத்து திரைகதையில் செய்யும் பிளேவும் திரைக்கதையில் உச்சம்.
நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவில் வண்ணமயமாக அழகியலாக ஜொலிக்கின்றன காட்சிகள். சாய் அப்யங்கரின் இசை ஓகே ராகம்.
பரத் விக்ரமனின் படத்தொகுப்பு தெறிப்பு. சிறப்பு.
சாதி ஆணவத்தை நான் சென்ஸ் என்று உடைத்துப் போடும் காட்சி அருமை. பாராட்டுக்கள்.
மாமன் மகளை சிறுவயது முதல் தோழியாகப் பார்த்ததால் அவளைக் காதலிக்க முடியவில்லை என்கிறான் DUDE. அப்படியே ஆகட்டும்.
ஆனால், சிறுவயது முதல் தான் பாசமாக பார்த்த அவள், தான் கிடைக்காத ஏக்கத்தில் நொறுங்கி அழும்போதும் இன்னைக்கு என்னவோ புதன்கிழமை என்பது போல போய் விடுகிறான் DUDE.
திரும்ப இவன் காதல் சொல்ல வரும்போது அந்த ஆறு மாதத்துக்குள் அவள் வேறொருவனை காதலித்து விட்டாளாம். இதுகூட ஒகே இன்றைய தலைமுறையில் சகஜம் என்றே வைத்துக் கொள்வோம்.
சிறு வயது முதல் அவ்வளவு பாசமான மாமன் மகள், நம்ம DUDE-டிடம் காதலை இறைஞ்சி கலங்கி அழுதபோதுகூட, பாசத்தைக் காதலாக உணரத் தெரியாமல் அலட்சியமாகப் புறக்கணித்து போகும் DUDE, தான் ஆக்சிடெண்டில் சாகும் தறுவாயில் அவள் மேல் காதல் கொண்டான் என்பது பக்கா செயற்கை.


காதல் வந்திருக்கும் என்றால் அவளது உயிர் ஒழுகும் கண்ணீரின்போதே அவனுக்கு காதல் வந்திருக்கும். வரவில்லை என்றால் செத்தாலும் இவனால் அவளைக் காதலியாகப் பார்க்க முடியாது.
ஏனென்றால், A CHARACTER IS A CHARACTER IS A CHARACTER LIKE A ROSE IS A ROSE IS A ROSE. (நன்றி ELIZABETH BARRETT BROWNING)
சரி, அது போகட்டும்.
அப்படிப் போன காதலி நிலைமையை உணராமல் கல்யாணத்துக்கு முன்பே அந்த பயந்தாங்குளி காதலனோடு செக்ஸ் வைத்து கர்ப்பமும் ஆவாளாம். அவளுக்காக இவன் அளப்பரிய தியாகம், பழி பாவம் எல்லாம் சுமப்பானாம். இன்றைய தலைமுறை இதை எல்லாம் ரசிக்குமா?
ஏனென்றால் இயக்குநர் விக்ரமன் கூட இப்படி ஒரு தியாக ஹீரோவைக் காட்டி படம் எடுக்கவில்லை. இந்தப் படத்தைப் பார்த்தால் அவரே கூட கலங்கி மனம் நொறுங்கி அழுது விடுவார். (விக்ரமன் சார் கவனம்)
சிம்பிள்… படத்தில் வரும் பிரதீப் ரங்கநாதன் கேரக்டருக்குள் புகுந்து அதே பாணியில் சொல்வது என்றால்… ”ஏன்டா தாங்கற அளவுக்கு நெஞ்சை நக்குனா பரவால்ல. நெஞ்செலும்பு உடைந்து பீஸ் பீசாகும் அளவுக்கா நெஞ்சை நக்கறது?”
இப்படி அடிப்படையிலேயே சில தவறுகள் இருந்தாலும், அடுத்தடுத்து சுவாரஸ்யமான சம்பவங்கள், விபரீத நிகழ்வுகளுக்குள் தைரியமாக நுழையும் திரைக்கதை, அதையும் சமாளிக்கும் DUDE இன் கெத்து என்று படம் பெரிதாக சேதாரம் செய்யவில்லை.
ஒரு வழியாகத் தட்டித் தடவி உருட்டி உருண்டை பிடித்து அது உடைவதற்குள் ரசிகனின் கையில் போட்டுவிட்டு,
“இனி உடைஞ்சா அதை சாப்பிடுவீங்களோ, இல்லன்னா உடையாத உருண்டையை கடிச்சு சாப்பிடுவீங்களோ அது உங்க பாடு. நான் உங்க கையில் கொடுக்கும்போது உருண்டையாகத் தானே இருந்தது” என்று மானசீகமாக பொறுப்புத் துறப்பு செய்கிறது படக்குழு.
சில வழமையான, பொதுப் புத்தியில் புனிதம், நியாயம், தர்மம் என்று நம்பப்படும் விசயங்களை, இளங்கன்று பயமறியாது என்ற ரீதியில் இயக்குநர் கீர்த்தி வாசன் லாஜிக்காக, டெக்னிக்கலாக, பயாலஜிகலாக உடைத்துப் போடும் விதம் ஈர்க்கிறது.
இந்தப் படம் பூமர்களுக்கும் பிடித்தால் பெரும் வெற்றி. ஆனால், பிடிக்குமா என்ற சந்தேகம் படக் குழுவுக்கும் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் ”ஒரு மனுசனோட தனிப்பட்ட ஃபீலிங்கை கிரிஞ்ச்-ன்னு சொல்றதுதானே இப்ப ட்ரென்ட்” என்று பிரதீப் ரங்கநாதனே ஒரு காட்சியில் சொல்கிறார்.
எனினும் DUDE… ஜென்ஸீ தலைமுறைக்கு CUTE ஆகவே தெரியும்.
– சு. செந்தில் குமரன்

Please follow and like us:

You May Also Like

More From Author