டெங்கு போன்ற கொடிய நோய்களைக் கட்டுப்படுத்த பிரேசில் நாட்டில் உலகிலேயே மிகப்பெரிய ‘கொசுத் தொழிற்சாலை’ ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
சாவோ பாலோவின் காம்பினாஸ் நகரில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலை, வாரத்திற்கு சுமார் 1.9 கோடி கொசுக்களை உற்பத்தி செய்கிறது. ஆனால், இவை நோயைப் பரப்பும் சாதாரண கொசுக்கள் அல்ல; இவை டெங்கு பரவுவதைத் தடுக்கும் ‘பாதுகாப்பான’ கொசுக்கள் ஆகும். இந்தக் கொசுக்களின் உடலில், மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்காத வோல்பாக்கியா (Wolbachia) என்ற பாக்டீரியா செலுத்தப்பட்டுள்ளது.
இந்தக் பாக்டீரியா கொசுக்களின் உடலில் டெங்கு வைரஸ் வளர்வதைத் தடுத்து விடுகிறது. இதனால், இந்தக் கொசுக்கள் மனிதர்களைக் கடித்தாலும் டெங்கு வைரஸ் பரவாது. இங்கு உற்பத்தியாகும் ஏடிஸ் ஏஜிப்டி (Aedes aegypti) கொசுக்கள், இனப்பெருக்கம் செய்யும்போது, இந்த ‘வோல்பாக்கியா’ பாக்டீரியாவை அடுத்த தலைமுறைக் கொசுக்களுக்கும் கடத்தி விடுகின்றன. இதன் விளைவாக, அந்தப் பகுதியில் உள்ள ஒட்டுமொத்த கொசுக்களின் எண்ணிக்கையும் மெல்ல மெல்ல பாதுகாப்பானதாக மாறி, டெங்கு நோய் பரவும் வாய்ப்பு முற்றிலும் தடுக்கப்படுகிறது.
பிரேசில் அரசு இந்தப் பாதுகாப்பான கொசுக்களை நாட்டின் பல பகுதிகளில் வெளியிட்டுள்ளதன் காரணமாக, அங்கு டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இந்த வெற்றிகரமான மற்றும் பாதுகாப்பான தொழில்நுட்பம், இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
