விண்ணில் சொர்க்க அரண்மனை : 4 எலிகளுடன் விண்வெளிக்கு பறந்த 3 சீன வீரர்கள்!

Estimated read time 1 min read

சீனாவின் ஷென்சோ 21 விண்கலத்தின் மூலம் ஒரு பெண் உட்பட 3 விண்வெளி வீரர்கள், சர்வதேச சீன விண்வெளி மையத்தை அடைந்துள்ளனர். அவர்களுடன் 4 எலிகளும் அனுப்பப்பட்டுள்ளன. இதன் மூலம் விண்வெளி துறையில் சீனா புதிய சாதனை படைத்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காகச் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சீனாவை அமெரிக்கா வெளியேற்றியது. அதன் விளைவாக, விண்வெளியில் சீனா தனக்கென விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளது. முழுவதும் சீனாவால் கட்டப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையம் அமெரிக்காவின் சர்வதேச விண்வெளி நிலையத்தை விடவும் சுமார் 20 சதவீதம் பெரியதாகும்.

ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலை இராணுவத்தால் இது கட்டுப்படுத்தப் படுகிறது. குறைந்தது அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த விண்வெளி நிலையத்தை வசிக்கும் இடமாக வைத்திருக்கச் சீனா திட்டமிட்டுள்ளது.

புதிய தொகுதிகளுடன் விண்வெளி நிலையத்தை விரிவுபடுத்தவும், வணிக நடவடிக்கைகளுக்குப் புறக்காவல் நிலையத்தைத் திறப்பதும், காய்கறி தோட்டங்களை அமைப்பதும் எனச் சீனா பணி செய்து வருகிறது.

தியான்காங் எனப் பெயரிடப்பட்ட சீனாவின் விண்வெளி நிலையத்தின் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 2022 டிசம்பர் மாதத்தில் இந்த விண்வெளி நிலையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்காக, கடந்த பல ஆண்டுகளாகவே ‘ஷென்சோ-தொடர் விண்கலங்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவி வருகிறது.

ஷென்சோ விண்கலம் ரஷ்யாவின் Soyuz சோயுஸ் விண்கலத்தைவிட பெரியதான விண்கலமாகும். சீனாவின் (Mengzhou) மெங்சோ குழுவினரால் உருவாக்கப்பட்ட இது மறுபடியும் பயன்படுத்தக் கூடியதாகவும், சீனாவின் சொந்த விண்வெளி நிலையத்தில் சேவை செய்வதோடு மட்டுமல்லாமல், விண்வெளி வீரர்களைச் சந்திரனுக்கு அனுப்பும் திறன் கொண்டதாகவும் உள்ளது.

ஷென்சோ-12 விண்கலத்தில் சீனாவின் விண்வெளி வீரர்கள் அடங்கிய முதல் குழு புதிய விண்வெளி நிலையத்துக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டனர். அந்த வரிசையில், ஷென்சோ 21 விண்கலம் சீனாவின் ஜியுச்சுவன் செயற்கைக்கோள் ஏவு தளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவபட்டுள்ளது. இது சீனாவின் விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் 10வது விண்வெளி வீரர் விமானமாகும். சீனாவின் விண்வெளி நிலையம் பயன்பாட்டுக்கு வந்ததில் இருந்து, விண்வெளி வீரர்கள் செல்லும் ஆறாவது பயணம் இதுவாகும்.

2022ம் ஆண்டில் விண்வெளியில் மூன்று தொகுதிகள் கொண்ட சுற்றுப்பாதை புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்ட பின் விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது ஏழாவது முறையாகும். இந்நிலையில், லாங் மார்ச்-2F கேரியர் ராக்கெட்டில் ஷென்சோ-12 விண்கலம் வெற்றிகரமாக விண்வெளி நிலையத்தைச் சென்று அடைந்துள்ளது.

மூத்த சீன விண்வெளி வீரரான 48 வயதான கமாண்டர் ஜாங் லு தலைமையில் வு ஃபீ மற்றும் ஜாங் ஹாங்ஷாங் ஆகிய விண்வெளி வீரர்கள் ஷென்சோ-21 விண்கலத்தில் சென்றுள்ளனர். இதில், ஷென்சோ-12 குழுவில் 32 வயதான வூ சீனா விண்வெளி தொழில்நுட்ப அகாடமியில் பொறியாளராக இருக்கிறார்.

முதல்முறையாக விண்வெளிக்குச் சென்றதன் மூலம், சீனாவின் இளைய விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். வெற்றிகரமாக விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்த ஜாங் லு மற்றும் அவரது குழுவினரை ஏற்கனவே விண்வெளி நிலையத்தில் பணியில் இருக்கும் ஷென்ஜோ 20 மிஷனின் கமாண்டர் சென் டோங் மற்றும் சென் ஜோங்ருய் மற்றும் வாங் ஜீ ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர்.

ஷென்ஜோ 20 மிஷனின் கமாண்டர் சென் டோங், 400 நாட்கள் புவி சுற்றுப்பாதையில் இருந்த முதல் சீன விண்வெளி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அவரும் அவரது குழுவினரும் பூமிக்குத் திரும்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஷென்சோ-21 விண்வெளிக் குழுவினருடன் இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் எலிகள் என நான்கு எலிகளும் அதற்கான உணவுப் பொறிகளும் விண்வெளிக்கு அனுப்பப் பட்டுள்ளன. விண்வெளியில், உடலியல் மற்றும் நோயியல் செயல்முறைகளைப் படிப்பதற்கும், விண்வெளியில் வாழும் உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றைப் படிப்பதற்கும் உதவும் என்று கூறப்படுகிறது.

விண்வெளியில் இருந்து எலிகள் மீண்டும் பகுப்பாய்வுக்காகப் பூமிக்குத் திரும்பும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே விண்வெளி நிலையத்துக்கு வரிக் குதிரை மற்றும் மீன்களை அனுப்பி சீனா ஆய்வு செய்துள்ளது.

சிறிய பாலூட்டிகளை விண்வெளி நிலையத்துக்கு அனுப்புவது இதுவே முதல் முறை ஆகும். ஷென்சோ-21 குழு உறுப்பினர்கள் விண்வெளி வாழ்க்கை அறிவியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம், விண்வெளி மருத்துவம், விண்வெளி பொருள் அறிவியல், நுண் ஈர்ப்பு திரவ இயற்பியல் மற்றும் எரிப்பு மற்றும் புதிய விண்வெளி தொழில்நுட்பங்கள் உட்பட மொத்தம் 27 புதிய சோதனைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விண்வெளி நிலையம் குறைந்த பூமி சுற்றுப்பாதையில் இருப்பதை உறுதி செய்யும் அதே வேளையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குச் சந்திரனில் மனிதர்களைத் தரையிறங்குவதற்கான இலக்கை நோக்கிச் சீனா தீவிரமாக முன்னேறி வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author