ஆப்பிரிக்காவில் நீண்ட காலமாக நிலவும் மோதல்களைத் தீர்க்க அங்கோலா மேற்கொள்ளும் முயற்சிகளுக்குக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடான அங்கோலாவிற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ளார். இந்நிலையில் தலைநகர் லுவாண்டாவில் போர்ச்சுகீசிய ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட செயின்ட் மைக்கேல் கோட்டையைப் பார்வையிட்டார்.
அங்குள்ள படைத்துறை அருங்காட்சியகத்தில் ராணுவ ஆயுதங்கள் மற்றும் நினைவு சின்னங்களைப் பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து அங்கோலா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பெண் தலைவர் என்ற முறையில், அங்கோலா நாடாளுமன்றத்தில் பெண்களுக்குக் குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவம் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.
இந்தியாவிற்கும் அங்கோலாவிற்கும் இடையிலான உறவுகள், பரஸ்பர நம்பிக்கை, மரியாதை, பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை என கூறிய குடியரசுத் தலைவர், ஆப்பிரிக்காவில் நீண்ட காலமாக நிலவும் மோதல்களைத் தீர்க்க அங்கோலா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குப் பாராட்டுகள் எனக் கூறினார்.
