இளம் சீனவியல் அறிஞர்கள் சீன-வெளிநாட்டு நாகரிகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை மேம்படுத்தும் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும் என்று சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் ஊக்கத்தை வழங்கியுள்ளார்.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டு உலகச் சீனமொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உலகின் 51நாடுகளில் இருந்து வந்துள்ள 61 இளம் சீனவியல் அறிஞர்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இளம் சீனவியல் அறிஞர்கள் சீனமொழி மற்றும் பண்பாட்டைப் போற்றி வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், சீனவியலின் முன்னேற்றத்தையும் நாகரிகங்களுக்கிடையேயான பரஸ்பரக் கற்றலையும் வளர்ப்பவர்களாகத் திகழ்வதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தன் கடிதத்தில் சீனவியலானது மனித குலத்துக்கான பொதுப் பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்வதையும் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக இளம் சீனவியல் அறிஞர்கள் ஷிச்சின்பிங்கிற்கு எழுதிய கடிதத்தில் சீனமொழிக் கல்வியின் வழி தாங்கள் பெற்ற அனுபவங்களையும் உள்ளுணர்வையும் குறிப்பிட்டிருந்ததோடு, சீனமொழியை ஆழமாகக் கற்று நாகரிகங்களுக்கு இடையிலான பரிமாற்றத்தை முன்னெடுக்கும் விருப்பத்தையும் வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
