சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி II & IIA – முதன்மைத் (Mains) தேர்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான தொகுதி II & IIA முதல்நிலை (Preliminary) தேர்வுக்கான ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடக்கிறது.
சேலம் ஏற்காடு பிரதான சாலை கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 19.11.2025 அன்று காலை 10.00 மணி அளவில் துவங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பானது போட்டித் தேர்வுகளில் அனுபவம் மிக்க பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும், இலவச மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு உடனுக்குடன் மதிப்பெண் அடிப்படையில் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டுதல் வழங்கப்படவுள்ளன.
முதன்மை மற்றும் முதல்நிலை தேர்வுக்கான அனைத்து புத்தகங்களும் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் நூலகத்தில் மாணவர்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும், இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களுக்கு 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு துறையின் மூலமாக கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு 52 எண்ணிக்கையிலான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் மொத்தம் 3,191 நபர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றதில் நாளது தேதிவரை 462 நபர்கள் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று பல்வேறு அரசு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
எனவே, TNPSC தொகுதி II&IIA – முதன்மைத் (Mains) தேர்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான தொகுதி II&IIA முதல்நிலை (Preliminary) ஒருங்கிணைந்த தேர்வுக்கான போட்டித்தேர்வுக்கு தயாராகும் நபர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
