சென்னை – ஹைதராபாத் இடையே புல்லட் ரயில் வழித்தடம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் மத்திய தெற்கு ரயில்வே நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது.
மத்திய தெற்கு ரயில்வே சமர்ப்பித்துள்ள அறிக்கையில், சென்னை – ஹைதராபாத் இடையே அமையவுள்ள புல்லட் ரயில் வழித்தடத்தில் தமிழகத்தின் நில தேவை 223.4 ஹெக்டேர் என கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 61 கிலோ மீட்டர் தூரத்திற்கு புல்லட் வழித்தடம் அமையவுள்ளது என்றும்,
சென்னை சென்ட்ரலில் இருந்து தண்டையார்பேட்டை வழியாக மீஞ்சூர் வெளிவட்ட சாலை வரை 11.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப் பாதையாக திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வழக்கமான ரயில்கள் இயக்கப்படும் கூடூர் வழித்தடத்திற்கு மாற்றாக திருப்பதி வழித்தடத்தில் அமைக்க தமிழக அரசு வலியுறுத்தியதாகவும், அதிவேக ரயில் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் 12 மணி நேர பயணம் 2.30 மணி நேரமாக குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் , மீஞ்சூர் வெளிவட்டச் சாலை என இரண்டு அதிவேக ரயில் நிலையங்கள் அமைய பரிந்துரைக்க வேண்டும் என்றும், வழித்தடம் மற்றும் ரயில் நிலைய இடங்களை விரைந்து இறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நிலம் கையகப்படுத்துவதற்கான கொள்கை ரீதியான ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், புல்லட் ரயில் திட்டத்தை தமிழகத்தின் நீண்டகால உள்கட்டமைப்பு மாஸ்டர் திட்டத்தில் இணைக்க வேண்டும் எனவும் மத்திய தெற்கு ரயில்வே வலியுறுத்தியுள்ளது.
