சீனாவுடன் முற்றும் மோதல் : இந்தியாவுடன் நெருக்கத்தை அதிகரிக்கும் ஜப்பான்!

Estimated read time 1 min read

தைவான் தொடர்பாக ஜப்பானுக்கும், சீனாவுக்கும் மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்திய ஜப்பான் உறவு குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு

கடந்த நவம்பர் 7ம் தேதி, ஜப்பான் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், ‘தைவானில் சீனாவின் முற்றுகை, ஜப்பானின் இருப்புக்கே அச்சுறுத்தலாக மாறினால் ஜப்பான் தற்காப்புக்காக ராணுவப் படைகளை அனுப்புமா? எனக் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி, தைவான் கடல் பகுதியில் சீனா தன் போர் கப்பல்களை நிறுத்துவது, ஜப்பானின் இருப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று குறிப்பிட்டார். மேலும், தைவான் மீது சீனா ராணுவ நடவடிக்கை எடுத்தால் தற்காப்புக்காக ராணுவ நடவடிக்கையால் பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

கூடுதலாக அமெரிக்கா உடனான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் சுட்டிக் காட்டினார். இதுவரை ஜப்பான் பிரதமர்கள் எவரும் தைவான் விவகாரத்தில் இராணுவ நடவடிக்கை குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில், முதல் முறையாக நாட்டின் பாதுகாப்புடன் தைவானை தொடர்புபடுத்தி சனே தகாய்ச்சி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை விடவும் பெரிய வல்லரசாகத் தன்னை காட்டிக் கொள்ளும் சீனாவை ஜப்பான் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பதையே ஜப்பான் பிரதமரின் பேச்சு வெளிப்படுத்தியுள்ளது. உடனடியாக, தைவான் விவகாரத்தில் ராணுவ தாக்குதல் நடத்த ஜப்பான் துணிந்தால், உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்த சீனா, இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு அதிகாரப்பூர்வமாகக் கடிதம் எழுதியுள்ளது.

ஜப்பான் பிரதமரின் கருத்துக்கள் தேசிய பாதுகாப்பு கவலைகளைப் பிரதிபலிப்பதாகவும், பிராந்திய அச்சுறுத்தல்களுக்கு அடிப்படையாகவும்உள்ளதாகக் கூறியுள்ள சீனா, பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினராக இருக்கும் தகுதியையே ஜப்பான் இழந்துவிட்டது என்று குற்றம்சாட்டியுள்ளது.

ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சியின் தலை துண்டிக்கப் படும் என்ற அந்நாட்டுக்கான சீனத் தூதர் ஜெனரல் சூ ஜியானின் சர்ச்சைக்குரிய பதிவு மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தைவான் குறித்த தனது கருத்துக்களைத் திரும்பப் பெற மறுத்த ஜப்பான் பிரதமர், தைவான் குறித்த நாட்டின் நிலைப்பாடு மற்றும் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

இருநாடுக்கும் இடையே நடந்த தூதரக பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதனையடுத்து, ஜப்பானிலிருந்து கடல் உணவுகள் இறக்குமதியை தடை செய்த சீன அதிபர் ஷி ஜின்பிங், ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் எனவும் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஏற்கெனவே எல்லை பிரச்னைகள் மற்றும் கடல் பாதுகாப்பில் சீனாவின் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் ஜப்பானுடன் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை இந்தியா வலுப்படுத்தியுள்ளது. டெல்லி-மும்பை தொழில்துறை வழித்தடம் மற்றும் மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் திட்டத்திற்கு ஜப்பான் முதலீடு செய்து நாட்டின் நேரடி அந்நிய முதலீட்டை அதிகரித்துள்ளது.

இந்தியாவும் ஜப்பானும் குவாத் அமைப்பின் மூலம் சுதந்திரமான, இந்தோ-பசிபிக் பிராந்திய மற்றும் அது சார்ந்த சர்வதேச ஒழுங்கையும் ஊக்குவிக்க ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன சீனாவுடனான மோதல் அதிகரித்துள்ள சூழலில் ஜப்பான், இந்தியாவுடனான வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வளர்த்தெடுக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author