இன்று (வெள்ளிக்கிழமை) தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக ராமேசுவரத்தில் பலத்த சூறைக் காற்று மணிக்கு 50 கி.மீ வேகத்தில் வீசுவதால் பாம்பன் பாலம் வழியே செல்ல இருந்த அனைத்து ரெயில்களும் மண்டபம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ராமேசுவரத்தில் இருந்து புறப்பட வேண்டிய ரெயில்கள் மண்டபம் பகுதியில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்றும், நாளையும் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரை வீசக்கூடும் என்றும், ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுநாள் வரை மணிக்கு 50 முதல் 80 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது
