தமிழ் திரையுலக வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த ‘கரகாட்டக்காரன்’ படத்தின் நாயகன் ராமராஜன் மற்றும் நாயகி கனகா ஆகியோர், சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் சந்தித்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 1989-ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கரகாட்டக்காரன்’. கிராமத்து மண் வாசனையுடன், கரகாட்டக் கலைஞர்களின் வாழ்வியலைப் பேசிய இப்படம், பட்டிதொட்டியெங்கும் வசூல் சாதனை படைத்தது. மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் மட்டும் 425 நாட்கள் ஓடி முத்திரை பதித்தது.
இசைஞானி இளையராஜாவின் இசையில் அமைந்த “மாங்குயிலே பூங்குயிலே”, “குடகுமலை காற்றில்” உள்ளிட்ட 9 பாடல்களும் இன்றும் ரசிகர்களின் விருப்பப் பாடல்களாக உள்ளன. குறிப்பாக, கவுண்டமணி – செந்தில் கூட்டணியின் நகைச்சுவை 36 ஆண்டுகளைக் கடந்தும் ரசிக்கப்பட்டு வருகிறது.
பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான கனகா, இந்தப் படத்தின் மூலமே கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் தந்த பிரம்மாண்ட வெற்றியால், ரஜினியுடன் ‘அதிசய பிறவி’, பிரபுவுடன் ‘கும்பக்கரை தங்கையா’, விஜயகாந்துடன் ‘கோவில் காளை’ என 40-க்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.
தாய் தேவிகாவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட சோகத்தாலும், குடும்பச் சிக்கல்களாலும் திரையுலகிலிருந்து ஒதுங்கிய கனகா, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தனிமையில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு நடிகை குட்டி பத்மினி அவரைச் சந்தித்தபோது வெளியான புகைப்படம், கனகாவின் அடையாளமே தெரியாத தோற்றத்தைக் கண்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், 36 ஆண்டுகளுக்குப் பிறகு ‘முத்தையா – காமாட்சி’ ஜோடி (ராமராஜன் – கனகா) சென்னையில் மீண்டும் சந்தித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட இந்தப் புகைப்படம், பழைய நினைவுகளைத் தூண்டும் வகையில் அமைந்திருப்பதாக ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
