உலகில் தங்கம், வெள்ளி அல்லது கச்சா எண்ணெய் போன்றவற்றை விடவும் மிகவும் சக்திவாய்ந்த சொத்தாக ‘ரியல் எஸ்டேட்’ (நிலம் மற்றும் சொத்துக்கள்) உருவெடுத்துள்ளது. 671 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பைக் கொண்டுள்ள ரியல் எஸ்டேட் துறை, உலகிலேயே முதலிடத்தில் உள்ளது; இது வரும் 2029-ஆம் ஆண்டுக்குள் 727 டிரில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக, 109 டிரில்லியன் டாலர் மதிப்புடன் கச்சா எண்ணெய் இரண்டாவது இடத்திலும், சீன நாணயமான யுவான் 48 டிரில்லியன் டாலர் மதிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. தங்கம் 31 டிரில்லியன் டாலர் மதிப்புடன் நான்காவது இடத்தையே பிடித்துள்ளது.
நாணயங்களைப் பொறுத்தவரை, பலரும் அமெரிக்க டாலர் தான் வலிமையானது என்று நினைப்பார்கள், ஆனால் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் சீன யுவான் தான் உலகின் சக்திவாய்ந்த நாணயமாக உள்ளது. டாலர் ஐந்தாவது இடத்திலும், யூரோ ஆறாவது இடத்திலும் உள்ளன.
நிறுவனங்களைப் பார்த்தால், செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் ஜொலிக்கும் ‘நிவிடியா’ நிறுவனம் 4.50 டிரில்லியன் டாலர் மதிப்புடன் உலக அளவில் பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் உலகின் மிக சக்திவாய்ந்த சொத்துக்களின் பட்டியலில் முன்னணியில் உள்ளன.
