மதுரை : மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் இந்த பாரம்பரிய வீர விளையாட்டில் ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்களும், பார்வையாளர்களும் கலந்துகொண்டுள்ளனர். காலை 10 மணி நிலவரப்படி போட்டியில் ஏற்பட்ட காயங்களால் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களில் 8 மாடுபிடி வீரர்கள், 4 மாட்டு உரிமையாளர்கள், 4 பார்வையாளர்கள் ஆகியோர் அடங்குவர்.
மேலும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 4 பேரும் காயமடைந்துள்ளனர். இவர்களில் 6 பேர் காயங்கள் கடுமையானதால் உடனடியாக மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடுகளின் ஆக்ரோஷமான தாக்குதல்கள், தரையில் விழுதல், ஒருவருக்கொருவர் மோதுதல் ஆகியவற்றால் இந்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
போட்டி நடைபெறும் மைதானத்தில் மருத்துவக் குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், காயங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தமிழகத்தில் மிகவும் பிரபலமான பாரம்பரிய விளையாட்டாகும். ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கானோர் இதை காண வருகின்றனர். இந்த ஆண்டும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது.
காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.போட்டி முழு நாள் நடைபெறும் நிலையில், காயங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. ரசிகர்களும், வீரர்களும் பாதுகாப்புடன் போட்டியை ரசிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் திருவிழாவின் முக்கிய அங்கமாகத் திகழ்கின்றன.
