இலங்கையில் 2026 ஆம் ஆண்டுக்கான “மகிழ்ச்சியான சீனப் புத்தாண்டு” எனும் பண்பாட்டு நிகழ்வுகளின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கொழும்புவில் உள்ள நெலும் பொக்குண அரங்கில் நடைபெற்றது. இது பாரம்பரிய சீனப் பண்டிகைக்கு முன்னதாக நடைபெறும் தொடர் கொண்டாட்டங்களின் தொடக்கமாகும்.
சீனாவின் பண்பாடு மற்றும் சுற்றுலா அமைச்சகம் இலங்கைக்கான சீனத் தூதரகம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் தொடங்கப்பட்ட இவ்விழாவில், தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள டாலி பாய் இனத் தன்னாட்சிப் பகுதியைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றனர்.
விழாவில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இலங்கைக்கான சீனத் தூதர் ட்சீ ட்சென்ஹொங், இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள், இலங்கையில் உள்ள சீன நாட்டவர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் உட்பட சுமார் 1,200 பேர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய ட்சீ, 2026 ஆம் ஆண்டில் சீனக் குதிரை ஆண்டு பிறக்கப்போவதாகக் குறிப்பிட்ட அவர், சீனப் பண்பாட்டில் குதிரை என்பது முயற்சி, விசுவாசம் மற்றும் வெற்றியைச் சித்தரிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இலங்கையில் பெரிதாகப் போற்றப்படும் நம்பிக்கை மற்றும் கடின உழைப்புடன் ஒத்துப்போவதாகவும் அவர் கூறினார்.
தொடக்க விழா மட்டுமல்லமாது இந்தப் பண்பாட்டு நிகழ்ச்சியானது கொழும்பு துறைமுக நகரம், அம்பந்தோட்டை சர்வதேச மாநாட்டு மையம் மற்றும் கொழும்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கராமயை கோயில் ஆகிய இடங்களிலும் சீனப் பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகள், அணிவகுப்புகள் மற்றும் பிற செயல்பாடுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
