சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் தலைமையமைச்சர் கீர் ஸ்டார்மருடன் ஜனவரி 29ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சந்திப்பு நடத்தினார். இச்சந்திப்பின் போது சீனாவும் பிரிட்டனும் நீண்டகால மற்றும் சீரான நெடுநோக்கு கூட்டாளி உறவை வளர்க்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில், தற்போதைய சிக்கலான சர்வதேசச் சூழ்நிலையில், உலக அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பதற்காகவும், இரு நாட்டுப் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காகவும் இரு நாடுகள் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றார்.
மேலும், கல்வி, மருத்துவம், நாணயம், சேவை ஆகிய துறைகளில் இரு தரப்பும் பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, செயற்கை நுண்ணறிவு, உயிரின அறிவியல், புதிய எரியாற்றல், கார்பன் குறைந்த தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் கூட்டு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மானுடவியல் பரிமாற்றத்தை நெருக்கமாக்கி, இரு நாட்டு மக்களின் தொடர்புக்கு வசதியளிக்க வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
தவிரவும், சீனாவும் பிரிட்டனும் பலதரப்புவாதம் மற்றும் தாராள வர்த்தகத்துக்கு ஆதரவளித்து, மேலும் நேர்மையான உலகளாவிய ஆளுகை அமைப்புமுறையின் கட்டுமானத்தை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஸ்டார்மர் கூறுகையில், சீனாவுடன் உயர்நிலை தொடர்புகளை நிலைநிறுத்தி, வர்த்தகம், முதலீடு, நாணயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை வழங்க பிரிட்டன் விரும்புவதாகத் தெரிவித்தார்.
