* திராவிட இயக்க ஆய்வாளர் மானமிகு க. திருநாவுக்கரசு அவர்கள், திராவிட இயக்கத்தின் முன்னோடி ஆளுமைகளின் ‘திராவிட இயக்க வேர்கள்’ என்ற தலைப்பில் எழுதியிருந்த படைப்பு பற்றி எனது நூல் அறிமுகவுரையை சமீபத்தில் பகிர்ந்திருந்தேன் .
* அந்த நூலின் தொடர்ச்சியாக, திராவிட இயக்கங்களில் பணியாற்றிய 36 பெருமக்கள் பற்றிய வாழ்க்கை தகவல்களின் அருமையான தொகுப்பாக இந்த நூலை வெளியிட்டுள்ளார்!
* நூறாண்டுகள் கடந்தும் இன்றும் கொள்கை மாறாமல் உறுதியாக நிற்கும் மாபெரும் கட்டிடத்தின் வலிமையான தூண்களாக விளங்கிய பேராளுமைகளின் தகவல் களஞ்சியம் தான் இந்த படைப்பு என்பது சிறப்பாக கருத வேண்டிய ஒன்று!
* இந்த ஆளுமைகளில் பலரை நாம் அறிந்திருந்தாலும் அவர்கள் பற்றிய பல அரிய தகவல்களை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை! அதேபோல பல்வேறு தகவல்களை நாம் அறிந்திருந்தாலும் அதற்கான ஆளுமைகள் யார் யார் என்பதை அறியாமல் கடந்து விட்டோம்.
அந்தக் குறையை இந்த நூல் முற்றிலுமாக நீக்கி விடுகிறது!
* நூற்றாண்டு கண்டு விட்ட திராவிட இயக்கத்தின் வேர்களை அறிந்து கொண்டது போலவே இந்த தூண்களையும் அறிந்து கொள்வது நமது கடமையாக கருதுகிறேன்!
* இந்த நூலில் தரப்பட்டுள்ள 36 ஆளுமைகள் பற்றி சிறிதளவாவது அறிமுகம் நமக்கு கட்டாயம் தேவை என்பதால், ஏற்கனவே தெரிந்த தகவல்களை குறைத்துக் கொண்டு அதிகம் தெரியாத தகவல்களை மட்டுமே இந்த அறிமுகவுரையில் வழங்கியுள்ளேன்.
இதோ அந்த ஆளுமைகளின் பட்டியல் :
1) திராவிட இயக்கத்தின் மாபெரும் சாதனையாளராக கருதப்படுபவரும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்கப் பெற்றவரும், சென்னை வள்ளுவர் கோட்டம், குமரி முனை வள்ளுவர் சிலை, அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்ற பண்பாட்டு சின்னங்களை உருவாக்கியவரும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், பெண்ணுரிமை சட்டங்கள் போன்றவற்றை இயற்றியவரும், முத்தமிழறிஞர் என அறியப்பட்டவருமான கலைஞர் மு. கருணாநிதி (1924 – 2018).
2) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறிஞர் அண்ணாவை மாணவர்களிடம் பேசுவதற்கு கூட்டத்தை (1942) முதன்முதலில் ஏற்பாடு செய்தவரும், திமுகவின் நீண்ட காலப் பொதுச் செயலாளரும், ராமையா என்ற இயற்பெயர் கொண்டவருமான பேராசிரியர் க.அன்பழகன் (1922 – 2020).
3) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரை மாணவர்களிடம் பேசுவதற்கு கூட்டத்தை (1944) முதன் முதலில் ஏற்பாடு செய்தவரும், அண்ணாவால் ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ என அழைக்கப்பட்டவரும், நாராயண சாமி என்ற இயற்பெயர் கொண்டவருமான நாவலர் இரா. நெடுஞ்செழியன் (1920 – 2000).
4) திராவிடர் இயக்கத்தின் மாணவருலக முதல் தளபதியும், பிடிவாத குணமும் பிறரை வசியப்படுத்தக்கூடிய சாமர்த்தியம் வாய்த்தவரும், சோமசுந்தரம் என்ற இயற்பெயர் கொண்டவருமான கே.ஏ.மதியழகன் (1926 – 1983).
5) பெரியாரின் தொண்டராக இருந்தவரும், ஆனந்த போதினி இதழின் அச்சுக் கோப்பாளரும், ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பின்னர் திராவிட இயக்கத்திற்கு வந்தவருமான என்.வி.நடராசன் (1911 – 1975).
6) காங்கிரஸ் அரசால் முதன் முதலாக தடை செய்யப்பட்ட இயல் நூல் ‘இராவண காவியம்’ எழுதி மாபெரும் புகழ் பெற்றவரான புலவர். குழந்தை (1906 – 1972).
7) தனது பள்ளிப் பருவத்திலேயே தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளையும் பின்னர் இலத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளையும் கற்றுத் தேர்ந்தவரும், திராவிட இயக்க அறிவாளர்கள் வரிசையில் மாறுபட்ட சிந்தனையாளருமான பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார் (1907 – 1989).
8) திராவிட, இந்திய, உலக மொழிகளில் அமைந்த 23 மொழிகளில் இலக்கண அறிவு பெற்றவரும், தேவநேசன் என்ற இயற்பெயர் கொண்டவருமான மொழி நூலறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர் (1908 – 1981).
9) தனித் தமிழ் இயக்கம் வளர்த்தவரும், சுவாமி நாதன் என்ற இயற்பெயர் கொண்டவருமான கு. மு. அண்ணல் தங்கோ (1904 – 1974).
10) தந்தை பெரியாரைப் போன்றே பேச்சு நடையைக் கொண்டவரும், இவர் எழுதிய நூல் ‘காந்தியார் சாந்தியடைய’ காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டு அதன் காரணமாக சிறையில் அடைபட்டு மொட்டை அடிக்கப்பட்டவரும், வாலிபப் பெரியார் என அழைக்கப்பட்டவருமான ஏ.வி.பி.ஆசைத்தம்பி (1924 – 1979).
11) வைக்கம் போராட்டத்தில் பெரியாரோடு கலந்து கொண்டு சிறை சென்றவரும், பெரியாரின் கொள்கைகளை இறுதி வரை காப்பாற்றியவரும், பெரியாரின் துணைவருமான அன்னை நாகம்மையார் (1885 – 1933).
12) பெரியாரின் தொண்டராக இருந்து பின்னர் பெரியாரை மணந்தவரும், பெரியாரின் மறைவுக்குப் பின்னர் திராவிடர் கழகத்தின் தலைவரானவரும், ‘இராவண லீலா’ நடத்தி வட இந்திய அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தவரும், காந்திமதி என்ற இயற்பெயர் கொண்டவருமான அன்னை. மணியம்மையார் (1920 – 1978).
13) சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திமுக அதன் பின்னர் அதிமுகவிலும் சேர்ந்து இறுதியில் மத்திய அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தவரான சத்திய வாணி முத்து (1923 – 1999).
14) அண்ணாவின் அன்பிற்குரிய பத்திரிக்கையாளர் காஞ்சி கல்யாண சுந்தரம் (1909 – 1982).
15) சட்ட எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு, கைதாகி, சிறை சென்ற போது கோர்ட்டில் தனது வாக்குமூலத்தை கவிதையிலேயே தந்தவரும், நவநீத கிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்டவருமான புலவர் பொன்னி வளவன் (1934 – 1997).
16) ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா’ என்ற உணர்ச்சி மிகு பாடலை எழுதியவரும், பின்னர் திராவிடர் இயக்கத்தை விட்டு காங்கிரஸ் கட்சிக்கு மாறிப் போனவரும், ‘எதனைக் கண்டான் மதம்தனைப் படைத்தான்?’ என கேள்வி கேட்டு எழுதிய அதே கையால் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்ற நூலை எழுதியவரும், முத்தையா என்ற இயற்பெயர் கொண்டவருமான கவியரசு. கண்ணதாசன் (1927 – 1981).
17) தொலைக்காட்சி மூலமாக 17 ஆண்டுகள் தமிழை கற்பித்தவரும், ‘பெரியார் கணினி’ என்ற தகவல் களஞ்சிய நூலைப் படைத்தவரும், திருஞானசம்பந்தன் என்ற இயற்பெயர் கொண்டவருமான பேராசிரியர். புலவர் மா.நன்னன் (1923 – 2017).
18) சிறந்த நாடாளுமன்றவாதி என பெயர் பெற்றவரும், சீனிவாசன் என்ற இயற்பெயர் கொண்டவருமான இரா. செழியன் (1923 – 2017).
19) திராவிட இயக்கத்தின் போர்வாள் என அழைக்கப்பட்டவரும், மாணிக்க வாசகம் என்ற இயற்பெயர் கொண்டவருமான காஞ்சி மணிமொழியார் (1900 – 1972).
20) காஞ்சியை கழகக் கோட்டையாக்கிய ஏ. கே. தங்கவேலர் (1892 – 1971).
21) சட்டமன்ற பேரவைத் தலைவராக இருந்த புலவர் கா. கோவிந்தன் (1915 – 1991).
22) பெரியாரின் நம்பிக்கைக்குரியவரும் நவாபு சாகிபு என அறியப்பட்ட எஸ்.எம்.ஜக்கரியா (1912 – 2004).
23) வால்டேர் – ரூசோ – சாக்ரடீஸ் ஆகியோரை தனது பேச்சினிடையே கொண்டு வந்து வியக்கச் செய்தவரும், சின்னராஜ் என்ற இயற்பெயர் கொண்டவருமான சிந்தனைச் சிற்பி சி. பி. சிற்றரசு (1908 – 1978).
24) இயக்கமே வாழ்க்கையாக, மாணவர்களை ஒருங்கிணைப்பதே வேலையாக இருந்தவரும், மேடைப் பேச்சிலே தகர்த்து துளைக்கும் ஆற்றல் பெற்றதால் ‘டார்பிடோ’ என அழைக்கப்பட்டவருமான ஏ. பி. ஜனார்த்தனம் (1919 – 1987).
25) அறிஞர் அண்ணாவை முதன் முதலில் காரைக்குடியில் பொதுக் கூட்டத்தில் பேச வைத்தவரும், தொண்டின் இலக்கணமாக விளங்கியவருமான காரைக்குடி இராம. சுப்பையா (1908 – 1997).
26) பகுத்தறிவு கருத்துகளை எளிமையான முறையில் திரையில் அமைத்து நடித்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் (1908 – 1957).
27) திராவிடர் இயக்கத்தின் கொள்கைகளை திரையிசைப் பாடல்களாக எழுதிய கவிஞர் உடுமலை நாராயண கவி (1899 – 1981).
28) திராவிடர் இயக்கத்தின் முதல் நடிகரும், எம். ஜி. ஆரை அண்ணாவுக்கு அறிமுகம் செய்து வைத்தவரும், டி. வி. என். என்று அழைக்கப்பட்டவருமான நடிகர் டி.வி.நாராயண சாமி (1921 – 2000).
29) இந்தியாவிலேயே முதன்முதலாக தேர்தல் மூலமாக தமிழக மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி (1914 – 1971).
30) பாரதிதாசன் பரம்பரைக் கவிஞரும், அரங்கசாமி என்ற இயற்பெயர் கொண்டவருமான புதுமைக் கவிஞர் வாணிதாசன் (1915 – 1974).
31) திரைப்பட வசனகர்த்தாவாகவும் திரைப்படங்களை தயாரித்தவருமாக இருந்தவரும், ரங்கசாமி என்ற இயற்பெயர் கொண்டவருமான இராம. அரங்கண்ணல் (1928 – 1999).
32) எழுத்தாளரும் சிந்தாமணி என்ற இயற்பெயர் கொண்ட சிறுகதை மன்னன் எஸ். எஸ். தென்னரசு (1929 – 1991).
33) மேடையில் அண்ணாவின் குரல் போலவே கேட்க வைத்தவரும், தனது பேச்சில் தத்துவங்களை பரவவிட்டவருமான தத்துவ மேதை டி.கே.சீனிவாசன் (1922 – 1989).
34) பெரியாரையும் அண்ணாவையும் மாணவப் பருவத்திலேயே தனது பேச்சால் கவர்ந்தவரும், கலைஞரையும் எம்.ஜி.ஆரையும் தனது திறமையால் ஈர்த்தவருமான நாஞ்சில் கி.மனோகரன் (1929 – 2000).
35) அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலில் ஆங்கிலத்தில் எழுதியவரும் திராவிட இயக்க எழுத்தாளருமான ஏ. எஸ். வேணு (1925 – இறந்த ஆண்டு விவரம் கிடைக்கவில்லை).
36) பாவேந்தர் பாரதிதாசன் பரம்பரையில் வந்த பகுத்தறிவு பாவலரும், திராவிட நாட்டின் வானம்பாடி என அண்ணவால் புகழப்பட்டவரும், துரைராசு என்ற இயற்பெயர் கொண்டவருமான பாவலர் முடியரசன் (1920 – 1998).
* இவ்வாறு நூலில் தரப்பட்ட அனைத்து ஆளுமைகள் பற்றிய சிறு குறிப்பை தந்துள்ளேன். இனி இவர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இவை தூண்டுகோலாக அமையும் என்று நம்புகிறேன். இந்த நூலை இத்தனை சிறப்பாக எழுதி, தொகுத்து தந்த நூலாசிரியர் க.திருநாவுக்கரசு அய்யாவுக்கு எனது நன்றியும் பாராட்டுகளும்..!
பொ. நாகராஜன்,
பெரியாரிய ஆய்வாளர்,
சென்னை – 12.02.2026.
******************************
நூல்: திராவிட இயக்கத் தூண்கள்
ஆசிரியர்: க. திருநாவுக்கரசு
தளபதி பதிப்பகம்
மூன்றாவது பதிப்பு 2025
பக்கங்கள்: 520
விலை: ரூ.620/-
