டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் ஹாட்ரிக் வெற்றிகளுடன் சூப்பர் 8 சுற்றை உறுதி செய்துள்ள இந்திய அணி, இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் புதிய சோதனைகளை முயற்சி செய்ய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் திட்டமிட்டுள்ளார்.
நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டம் ஒரு சம்பிரதாயப் போட்டியாகவே பார்க்கப்படுவதால், அணியின் பகுதிநேர பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்த கம்பீர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. பயிற்சியின் போது ரிங்கு சிங் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் ஆஃப் ஸ்பின் பந்துவீச்சில் தீவிரமாக ஈடுபட்டனர். இன்றைய போட்டியில் இவர்கள் இருவரும் தலா 2 ஓவர்கள் வரை வீச வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 6 டி20 போட்டிகளில் 4 முறை டக்-அவுட் ஆகி விமர்சனத்திற்குள்ளான அபிஷேக் சர்மா, வலைப்பயிற்சியில் குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்ரவர்த்தி போன்ற முன்னணி பந்துவீச்சாளர்களின் பந்துகளை அதிரடியாக எதிர்கொண்டு பயிற்சி செய்தார். தொடக்க வீரராகத் தடுமாறி வரும் அவர், இன்றைய போட்டியில் தனது பார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
வேகம் குறைந்த பந்துகளுக்கு எதிராகத் தடுமாறும் திலக் வர்மாவுக்கு, பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஸு கோடாக் ஆகியோர் சிறப்பு ஆலோசனைகளை வழங்கினர். மிடில் ஓவர்களில் ரன் வேகம் குறைவது சூப்பர் 8 சுற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்தத் தவறை இன்றைய போட்டியிலேயே சரிசெய்ய இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது.
நேற்றைய பயிற்சியில் சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட 7 வீரர்கள் மட்டுமே பங்கேற்றனர். மற்ற வீரர்கள் இன்று பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்தியா – நெதர்லாந்து இடையிலான ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறுகிறது. நடப்புத் தொடரிலேயே அகமதாபாத் மைதானம் தான் பேட்டிங்கிற்குச் சாதகமாக (சராசரி ஓவருக்கு 9.38 ரன்கள்) இருந்து வருகிறது. இதனால், இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் 280 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
