பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜகவின் தேர்தல் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் 3வது தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோரும் கட்சியின் தலைவர் ஜே.பி நட்டாவும் கலந்துக் கொண்டனர். உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொண்டார். சுமார் 3 மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது.
உத்தர பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் எஞ்சியுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது.
இதுவரை 291 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை 4 கட்டமாக பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டுக்கான பாஜக வேட்பாளர்கள் மற்றும் தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி தலைவர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று 120 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.