சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஏப்ரல் 15ஆம் நாளன்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சியுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.
ஈரான்-அமெரிக்க பேச்சுவார்த்தையின் புதிய நிலைமை மற்றும் அடுத்த கட்ட திட்டம் குறித்து அராக்சி விளக்கமளித்தார். தற்போதைய நிலைமையைத் தணிவு செய்வதில் சீனாவின் முயற்சியை ஈரான் வெகுவாகப் பாராட்டுவதாகத் தெரிவித்த அவர், அமைதியை நிலைநிறுத்தவும் போர் நிறுத்தத்தை நனவாக்கவும் சீனா மேலும் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்ற வேண்டுமென ஈரான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
அப்போது வாங்யீ குறிப்பிடுகையில், மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காப்பதற்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 4 முன்மொழிவுகளை வழங்கியுள்ளார். இந்த அடிப்படையில் இந்நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சீனா உரிய தீர்வைக் கொண்டு வரும் என்றார். மேலும், போர் நிறுத்தத்தை நிலைநிறுத்துவதற்கும், அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கும் சீனா ஆதரவு அளிக்கும். இது, ஈரான் மக்களின் அடிப்படை நலன்களுக்கும், பிராந்திய நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் பொது விருப்பத்திற்குப் பொருந்தியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
