ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சர்கள் கூட்டத்தில் சில நாடுகளின் புவிசார் அரசியல் காரணமாக பொது அறிக்கை எட்டப்படாதது வருத்தத்துக்குரியது என்று சீனா புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இக்கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது. சீனாவின் நிலைப்பாட்டால் முக்கியமான விவகாரங்களில் கருத்தொற்றுமை எட்டப்படவில்லை என்று சில மேலை நாடுகளின் ஊடகங்கள் விமர்சித்திருந்தன.
இது குறித்த கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பதில் அளிக்கையில், சீனாவின் மீதான கூற்றுகள் உண்மைக்குப் புறம்பானவை என்று கூறிய அவர், கூட்டத்தில் நேர்மறையான முடிவுகள் எட்டப்பட்டதாகவும் ஆனால், சில நாடுகளின் புவிஅரசியல் நிலைப்பாடு காரணமாக பொது அறிக்கை வெளியிடப்பட முடியவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.