ரஷ்யா மற்றும் அண்டை நாடான கஜகஸ்தானில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய நாட்டின் தெற்கு யூரல், மேற்கு சைபீரியா மற்றும் வடக்கு கஜகஸ்தானில் உள்ள மலைப்பகுதிகளில், பனிப்பொழிவு மற்றும் பனிக்கட்டிகள் மிக உருகி வருவதால், முன்னெப்போதும் இல்லாத வகையில் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது. அப்பகுதியில் உள்ள ஆறுகளில், வெள்ளம் அபாய கட்டத்தைத் தாண்டி ஓடுகிறது.
கரையோர பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவும், கஜகஸ்தானும் அவசரக்கால நிலையை அறிவித்து, மீட்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இவ்விரு நாடுகளிலும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
யூரல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், ஆர்ஸ்க் நகருக்குள் தண்ணீர் புகுந்து நகரமே தத்தளிக்கிறது. முக்கிய சாலைகள், பாலங்கள் அனைத்தையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு பகுதிகளில், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.