பாஜக ஆட்சியில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்லாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
அப்போது, ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று காங்கிரஸ் கேட்கிறது. காங்கிரஸ் ஆட்சியின் போது பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் நாட்டுக்குள் நுழைந்து குண்டுவெடிப்பு நடத்தினர்.
ஆனால் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் எதுவும் பேசவில்லை. பாஜக ஆட்சியில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டது. கனவில் கூட காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என அவர் தெரிவித்தார்.
சொந்த குடும்ப உறுப்பினர்களை மேம்படுத்துவதுதான் இண்டி கூட்டணியின் ஒரே நோக்கம். ஆனால் மோடியின் ஒரே நோக்கம் ஏழைகளை முன்னேற்றுவது. 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் நாட்டில் 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
பழங்குடியின சமூகத்திற்கு காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்று ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புகிறேன். ஒடிசாவின் பழங்குடியின பெண்ணான திரௌபதி முர்முவை நாட்டின் ஜனாதிபதியாக்கியது பாஜக அரசு என்று அவர் கூறினார்.
அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசுதான் நாட்டில் பழங்குடியினர் நலனுக்காக தனி அமைச்சகத்தை அமைத்தது என்றும், பழங்குடியினரின் அடையாளமான பிர்சா முண்டாவின் நினைவாக ஆதிவாசி கவுரவ் திவாஸ் அனுசரிக்கும் நடைமுறையை மோடி அரசு தொடங்கியுள்ளது என்றும் அமித் ஷா கூறினார்.