அந்தமான் தீவுகளுக்கு அருகிலுள்ள ஆழ்கடல் பகுதியில் இயற்கை எரிவாயு இருப்புகளை ஆயில் இந்தியா நிறுவனம் கண்டறிந்துள்ளது.
அந்தப் பகுதியி வெற்றிகரமாக கண்டுபிடித்த இரண்டாவது எரிவாயு கிணறு இது என்பது குறிப்பிடத் தக்கது. இந்தக் கண்டுபிடிப்பு எரிபொருள் துறையில் தன்னிறைவை நோக்கி முன்னேறும் இந்தியாவின் மற்றொரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அந்தமான் தீவுகளின் கிழக்குக் கடற்கரையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், 355 மீட்டர் ஆழமுள்ள கடற்பகுதியில் ஸ்ரீ விஜய புரம்-3 ஆய்வுப் பகுதி அமைந்துள்ளது.
திறந்த பரப்பு உரிமக் கொள்கையின் கீழ் ஆயில் இந்தியா நிறுவனம், இந்தப் பகுதியில் நடத்திய ஆய்வில் சுமார் 355 மீட்டர் ஆழத்தில் மற்றொரு கடல்சார் இயற்கை எரிவாயுவைக் கண்டறிந்துள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பு வலுவான ஹைட்ரோகார்பன் அறிகுறிகளை வெளிப்படுத்துவதுடன், உள்நாட்டு எரிசக்தி வளங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பரந்த அளவிலான ஆய்வு முயற்சிகளின் வெற்றியாக கருதப்படுகிறது.
இந்தத் தகவலை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.
ஈயோசீன் (Eocene) பாறை அமைப்பில் 1,900 மீட்டருக்கும் மேல் ஆழத்தில் உள்ள ஒரு பாறையில் ஆரம்பக்கட்ட சோதனை நடத்தப்பட்டது.
துளையிடல் (perforation) பணிக்குப் பிறகு, அக்கிணற்றில் அழுத்தம் விரைவாக அதிகரித்ததுடன் உற்பத்தியும் தொடங்கியது. இது அப்பகுதியில் உள்ள நிலத்தடி எரிவாயு சேமிப்புப் பகுதியின் (reservoir) சிறப்பான தன்மைகளை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
சோதனையின் போது, எரிவாயு தொடர்ந்து எரிந்ததன் மூலம் அங்கு எரிவாயு இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அந்த எரிவாயுவை மாதிரி ஆய்வுக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த அரிய கண்டுபிடிப்பு, 2025-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட ‘சமுத்ரா மந்தன் மிஷன்’ (Samudra Manthan Mission) திட்டத்தின் நோக்கங்களை வலுப்படுத்தியுள்ளது.
அந்தமான் படுகையில் ‘ஆயில் இந்தியா’ நிறுவனம் இதுவரை தோண்டிய மூன்று கிணறுகளில், இரண்டில் ஹைட்ரோகார்பன்கள் இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இந்த எரிவாயு கண்டுபிடிப்புகள், இந்தியாவின் கடலோர ஆய்வு முயற்சிகளுக்கு, குறிப்பாக அதிகம் ஆராயப்படாத அந்தமான் படுகையில், ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகின்றன.
அந்தமான் பகுதியில் ஹைட்ரோகார்பன் வளத்தை வெளிக்கொணரும் நோக்கில், தீவிரப்படுத்தப்பட்ட ஆய்வு மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு இந்தக் கண்டுபிடிப்புகள் வழிவகுக்கும் எனத் தொழில்துறை வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது செயல்படும் பெட்ரோலிய அமைப்பின் ஒரு முக்கியக் குறியீடாக விளங்குவதாகவும், படுகைக்குள் கூடுதல் ஹைட்ரோகார்பன் படிவுகள் இருப்பதைக் குறிக்கக்கூடும் என்றும் ஆயில் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
முந்தைய ஸ்ரீவிஜயபுரம்-2 கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, ஒரு விரிவான மதிப்பீட்டுத் திட்டத்தை ஆயில் இந்தியா நிறுவனம் தொடங்கியது.
நில அதிர்வுத் தரவுகளை மறுசெயலாக்கம் செய்தல் மற்றும் கிட்டத்தட்ட 600 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான கூடுதல் முப்பரிமாண (3D) நில அதிர்வுத் தரவுகளைப் பெறுதல் ஆகிய ஆய்வுகளை முன்னெடுத்தது.
தரவு செயலாக்கம் மற்றும் விளக்கம் நடைபெற்று வருவதாகவும், இது எதிர்கால மதிப்பீட்டுத் துளையிடல் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் தொழில்நுட்பச் சிறப்பின் மூலம் ஆய்வை முன்னெடுத்துச் செல்வதற்கும், பாதுகாப்பான எரிசக்தி எதிர்காலத்திற்காக நாட்டின் ஹைட்ரோகார்பன் ஆற்றலை வெளிக்கொண்டு வருவதற்கும் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்த வெற்றி, உலகளாவிய எரிசக்தி நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், ஆழ்கடல் எரிசக்தி வளங்களைப் பயன்படுத்திக்கொள்ளவும் இந்தியாவுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்
நாட்டின் ‘அம்ரித் கால்’ (Amrit Kaal) காலக்கட்டத்தில் இந்தக் கண்டுபிடிப்பு எரிசக்தி துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
அந்தமான் கடலோரப் பகுதியில் மூன்று ஆய்வுக்கிணறுகளில் இருந்து இரண்டு வெற்றிகரமான எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இனி அந்தமான் கடலோரப் பகுதி, எதிர்கால எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளுக்கான இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய பகுதியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
