சீனாவின் சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஷிகாசே நகரிலுள்ள கியிரோங் வட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவு மீட்பு மற்றும் நிவாரண பணியை ஆராய்ந்து ஏற்பாடு செய்யும் வகையில் 28ஆம் நாள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் தலைமை தாங்கினார்.
கூட்டத்தின் தொடக்கத்தில், சீன அரசுத் தலைவரும் மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், இதர தலைவர்களுடன் இணைந்து எழுந்து நின்று, இந்தப் பேரழிவில் உயிரிழந்தோருக்கு மௌன அஞ்சலி செலுத்தினார்.
நேபாளத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் சிட்சாங்கின் கியிரோங் நுழைவாயில் பகுதியில் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்தப் பேரழிவுக்கு பிறகு பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் உடனே முக்கிய உத்தரவு பிறப்பிட்டு, பேரிடர் நீக்கம், அவசர மீட்புதவி உள்ளிட்ட பணிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். கட்சி மத்திய கமிட்டியின் வலுவான தலைமையிலும், சீன அரசவை பணிக் குழுவின் வழிகாட்டலிலும் பல்வேறு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இயற்கைச் சீற்றம் பீடபூமியின் உயரமான மற்றும் குளிர்ந்த பகுதியில் ஏற்பட்டதால், பேரிடர் நீக்கம் மற்றும் மீட்புப் பணி கடும் இன்னல்களை எதிர்கொள்கிறது. பல்வேறு தரப்புகள் மக்களே முதன்மை, உயிரே முதன்மை ஆகிய கொள்கைகளைக் கடைபிடித்து, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அறிவியல் பூர்வமான முறையில் பல்வேறு பணிகளை செவ்வனே செய்ய வேண்டும். மாயமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களை முழுமுயற்சியுடன் தேடி மீட்க வேண்டும். கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கையை வலுப்படுத்தி, துணை நிலை பேரழிவைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நேபாளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசர உதவிகளை வழங்கி, மீட்புதவிக்கான சர்வதேச ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
