சீனாவின் 8 நாள் வசந்தவிழா விடுமுறைக் காலத்தில் 50.1 கோடி உள்நாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இது கடந்த ஆண்டை விட 5.9 விழுக்காடு அதிகம் என்றும் கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4 வரையிலான விடுமுறைக் காலத்தில் சுற்றுலா நுகர்வு அளவானது கடந்த ஆண்டை விட 7 விழுக்காடு அதிகரித்து 67700 கோடி யுவானைத் தாண்டியது.
நாடு முழுவதும் அருவமான கலாச்சாரப் பாரம்பரிய நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டுப்புறக் கலைகள் அடங்கிய சுற்றுலாத் திட்டங்கள் அறிமகப்படுத்தப்பட்டன. பல நகரங்களில் நடைபெற்ற கோயில் கண்காட்சிகள், டிராகன் மற்றும் சிங்க நடனங்கள், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்தது.
அதேபோல், இவ்வாண்டில் இரவுநேர உலா நிகழ்வு சிறப்பு ஈர்ப்பைப் பெற்றது. ஒளிரும் விளக்குகளின் கண்காட்சி, வெவ்வேறு வடிவிலான வண்ணமிகு பாரம்பரிய விளக்குகள், இரவுநேர சொகுசுக் கப்பல் பயணம் ஆகியவை சுற்றுலாச் சந்தையைத் தூண்டின. இலவச விசா கொள்கையால் வசந்தவிழா விடுமுறைக் காலத்தில் சீனாவில் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தன.