ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை

Estimated read time 1 min read

செப்டம்பர் 1-ஆம் நாள் முற்பகல் கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கவுன்சிலின் 26-வது கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கலந்துகொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) நடப்புத் தலைவர் பதவி வகிக்கும் நாடான கிர்கிஸ்தான் அரசுத்தலைவர் ஜபரோவ் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். பெலாரஸ் அரசுத்தலைவர் லுகாஷென்கோ, இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி, ஈரான் அரசுத்தலைவர் பெசெக்சியன், கஜகஸ்தான் அரசுத்தலைவர் டோகாயேவ், பாகிஸ்தான் தலைமையமைச்சர் ஷாபாஸ், ரஷ்ய அரசுத்தலைவர் விளாமிர் புதின், தஜிகிஸ்தான் அரசுத்தலைவர் ரஹ்மான், உஸ்பெக்ஸ்தான் அரசுத்தலைவர் மிர்சியோயேவ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளர் யெர்மெக்பாயேவ் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

உறுப்பு நாடுகளின் தலைவர்கள் குழுப்புகைப்படம் எடுத்து கொண்ட பிறகு, சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உயர்தர வளர்ச்சியை ஊக்குவித்தல்”என்ற தலைப்பிலான முக்கிய உரைநிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில், இவ்வாண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்ட 25ஆவது ஆண்டு நிறைவாகும். கடந்த 25ஆண்டுகளில், இவ்வமைப்பானது, உலகின் மிகப் பெரிய பரப்பளவு, அதிகமான மக்கள் தொகை மற்றும் வளர்ச்சி உள்ளாற்றல் ஆகியவற்றைக் கொண்டுள்ள புதிய ரக பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பாக படிப்படியாக உருவெடுத்துள்ளது என்பதே அதன் மிக முக்கியமான சாதனையாகும். பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர நன்மை, சமத்துவம், கலந்தாய்வு, நாகரிக பல்வகைமைக்கான மரியாதை மற்றும் கூட்டு வளர்ச்சியை நோக்கிய தேடல் ஆகியவற்றைக் கொண்ட “ஷாங்காய் எழுச்சியை“ தொடர்ந்து நிலைநிறுத்திப் பின்பற்றி வருவது அதன்  மிகவும் மதிப்புமிக்க ஆத்மார்த்தமான செல்வம் ஆகும். அணிசேராமை, மோதலின்மை மற்றும் மூன்றாம் தரப்பினரைக் குறிவைக்காமை ஆகியவற்றை உள்ளடக்கிய சகவாழ்விற்கான சரியான பாதையைக் கண்டறிந்து, ஒரு பகிரப்படடக்கூடிய எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப பிராந்திய நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதே அதன் மிக முக்கியமான ஒத்துழைப்பு அனுபவமாகும் என்று தெரிவித்தார்.

மேலும், ஷிச்சின்பிங் 4 முன்மொழிவுகளையும் வழங்கினார். முதலாவது, வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து பொது செழிப்புக்கான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். இரண்டாவது, பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, பொதுவாக ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். மூன்றாவது, மக்களே முதன்மை என்ற மதிப்பு கருத்தில் ஊன்றி நின்று, தலைமுறை நட்புறவு அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும். நான்காவது, பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வில் ஊன்றி நின்று, நியாயமான மற்றும் ஒழுங்கமைவான ஆட்சிமுறையை மேம்படுத்த வேண்டும் என்று இந்த முன்மொழிவுகளில் இடம்பெற்றுள்ளன.

தவிர, அடுத்த 10 ஆண்டுகளுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சி உத்தியைச் செயல்படுத்தவும், உயர்தர வளர்ச்சியை அடையப் பாடுபடவும், மனிதகுல பொது எதிர்கால சமூகத்தைக் கட்டமைப்பதில் பெரும் பங்களிப்புகளைச் செய்யவும் அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற சீனா விரும்புகின்றது என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author