2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா தலையீட முயற்சித்தற்கு ஆதாரங்கள் உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக சீனா சென்ற அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்துப் பேசிய பின்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம், சான் பிரான்சிஸ்கோவில் நடந்த ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் போது, 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடக் கூடாதென அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங்கிடம் வலியுறுத்தியதாகவும், தற்போது மீண்டும் அதே செய்தியை ஜின்பிங்கிடம் தான் கூறியுள்ளதாகவும், ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடவில்லை என சீனா தொடர்ந்து கூறி வரும் நிலையில், சீன அதிபரை நேரில் சந்தித்த பிறகும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மீண்டும் அதே குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.