மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தில் இரவு நேரத்தில் இளைஞர்கள் சிலர் மது அருந்திவிட்டு, தடுப்பு சுவர் மீது ஏறி அட்டகாசம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
612 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட மதுரை – நத்தம் பறக்கும் பாலம் தற்போது இன்ஸ்டா ரீல்ஸ்களுக்கான தளமாக மாறி வருகிறது. இந்த பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்வது, இரவு நேரங்களில் ரேஸ் செல்வது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதற்காக சிலர் செய்யும் அட்டகாசங்களால், இந்த பாலத்தை பயன்படுத்தவே வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
அந்த வகையில், இளைஞர்கள் சிலர் மது அருந்திவிட்டு கையில் மதுபாட்டில்களுடன் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரின் மீது ஏறி நின்று ரீல்ஸ் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காவல்துறையினர் ரோந்து வரும் நேரத்தை இவர்கள் அறிந்து வைத்திருப்பதால், அவர்களிடம் சிக்காமல் தப்பித்து வருவதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.
இதுபோன்று பொதுஇடங்களில் மது அருந்திவிட்டு அட்டகாசம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பறக்கும் பாலத்தில் சிசிடிவி கேமிராக்களின் எண்ணிக்கையை அதிகரித்து வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.