தமிழக அமைச்சர்களுக்கான வீட்டு வாடகைப்படி ரூ.70 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாக நூறு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் பின்தேதியிட்டு இந்த அறிவிக்கை அமலுக்கு வருகிறது. சட்டப் பேரவைத் தலைவர், துணைத் தலைவர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், அரசின் தலைமைக் கொறடா ஆகியோருக்கு இந்த வீட்டு வாடகைப்படி உயர்வு பொருந்தும் என தகவல் வெளியாகியுள்ளது.
தங்களது சொந்த வீடுகளில் அல்லது லீசுக்கு குடியிருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு வீட்டு வாடகைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம், அரசுக்குச் சொந்தமான வீடுகளில் வசிப்போருக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கு முன்பாக கடந்த 2016-ஆம் ஆண்டு அமைச்சர்களுக்கான வீட்டு வாடகைப் படி உயர்த்தப்பட்டிருந்தது. அப்போது 20 ஆயிரம் ரூபாயாக இருந்த வாடகைப்படி, 70 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன்பின்னர், 8 ஆண்டுகள் கழித்து தற்போது வீட்டு வாடகைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.