சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு நிரந்தர உறுப்பினரும் சீனத் துணைத் தலைமை அமைச்சருமான டின்சியூயேசியாங் ஜூலை 21முதல் 23ஆம் நாள் வரை ரஷியாவில் பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் போது அவர் ரஷிய முதல் துணைத் தலைமை அமைச்சர் டெனிஸ் மாண்டுரோவுடன் இணைந்து சீன-ரஷிய முதலீடு ஒத்துழைப்பு ஆணையத்தின் 11ஆவது கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். மேலும், 6ஆவது சீன-ரஷிய எரியாற்றல் வணிகத் துறை கருத்தரங்கின் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் வாழ்த்து செய்தியைப் படித்து உரை நிகழ்த்தினார்.
முதலீடு மற்றும் எரியாற்றல் துறை சார்ந்த இரு தரப்பின் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கிய போது, டின்சியூயேசியாங் கூறுகையில், இவ்வாண்டு சீன-ரஷிய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும். ரஷியாவுடன் இணைந்து இரு நாட்டுத் தலைவர்களின் முக்கிய ஒருமித்த கருத்துக்களை உணர்ச்சிப்பூர்வமாக நடைமுறைப்படுத்தி இரு நாட்டு முதலீடு மற்றும் எரியாற்றல் ஒத்துழைப்பு நிலையைத் தொடர்ந்து உயர்த்த சீனா விரும்புவதாகத் தெரிவித்தார்.
அதன்பின் 6ஆவது சீன-ரஷிய எரியாற்றல் வணிகத் துறை கருத்தரங்கின் துவக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இக்கருத்தரங்கிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியதன் வழி இந்நிகழ்வுக்குப் பெரும் முக்கியத்துவம் அளித்துள்ளார் என்றார். மேலும், எரியாற்றல் வணிகத் துறையில் இரு தரப்பின் ஒத்துழைப்புகளின் சீரான போக்கை இரு தரப்புகளும் வலுப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார். பெரிய எரியாற்றல் திட்டங்களின் கட்டுமானத்தைக் கூட்டாக முன்னேற்ற வேண்டும். எரியாற்றல் தொழில் சங்கிலியில் ஒன்றுக்கொன்று நன்மை தரும் ஒத்துழைப்புகளை விரிவாக்கி, மேலும் நெருக்கமான எரியாற்றல் ஒத்துழைப்புக் கூட்டாளியுறவை உருவாக்க வேண்டும் என்றும் டின்சியூயேசியாங் கூறினார்.