சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் 23ஆம் நாள் காலை, பாரிஸில் நடைபெற்ற புதிய உலகளாவிய நிதி திரட்டல் உடன்படிக்கை உச்சிமாநாட்டின் நிறைவு விழாவில் பங்கெடுத்து உரைநிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில், உலகின் வளர்ச்சி மற்றும் மேலாண்மை பிரச்சினைக்குச் சீனா அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், உலக வளர்ச்சி, பாதுகாப்பு, நாகரிகம் ஆகியவை தொடர்பாக சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வழங்கிய முன்மொழிவுகள், சர்வதேசச் சமூகத்தில் விரிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதோடு, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு நீடித்து வரும் உந்து சக்தியை, சீனா ஊட்டி வருகிறது என்று தெரிவித்தார்.
சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, லீச்சியாங் 3 ஆலோசனைகளை முன்வைத்தார். முதலாவதாக, உலக நிதி மேலாண்மை சீர்திருத்தத்தை முன்னெடுக்க வேண்டும். இரண்டாவதாக, உலக வளர்ச்சிக் கூட்டாளியுறவை உருவாக்க வேண்டும். மூன்றாவதாக, பொருளாதார உலகமயமாக்கம் மற்றும் வர்த்தக தாராளமயமாக்கத்தை முன்னேற்ற வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.