மதுரையில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) தொடங்கி 11 நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெறும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
மதுரையில் உள்ள தமுக்கம் மைதானத்தில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்துடன் (ப.பா.சி.) இணைந்து நடத்தி வருகிறது.
இதன்படி, இந்த ஆண்டுக்கான புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கி 16.09.2024 வரை நடைபெற உள்ளது. இதற்காக 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன.
புத்தக திருவிழாவை முன்னிட்டு, தினமும் மாலை 6 மணி முதல் சிந்தனை அரங்கம் என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
இதில் பல்வேறு எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.