டெல்லி : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது முதல் தற்போது வரையில் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தான் இரு மாநிலங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன.
ஹரியானாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் சூழல் நிலவி வருகிறது. அதே போல, ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019இல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தலில் தேசிய மாநாடு கட்சி – காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.
இந்த முன்னிலை வெற்றிமுகத்தை, காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். ஹரியானா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 42 தொகுதிகளிலும், பாஜக 40 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 இடங்களில், தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி 50 தொகுதிகளிலும், காங்கிரஸ் 25 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 12 தொகுதிகளிலும், PDP கட்சி 4 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகிறது.