இந்திய சமகால ஓவிக் கலையில்

Estimated read time 1 min read

Web team

IMG_20240202_145305.jpg

இந்திய சமகால ஓவியக் கலையின் முன்னோடி !
எம் .எப் .உசேன் !

நூல் ஆசிரியர் ஓவியர் புகழேந்தி .மின் அஞ்சல் oviarpugal@yahoo.com

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

தூரிகை வெளியீடு ,S P-63, 3 வது தெரு ,முதல் செக்டார் ,கலைஞர் நகர் , சென்னை .6000078. கைபேசி 9444177112. விலை ரூபாய் 175.

நூல் ஆசிரியர் ஓவியர் புகழேந்தி அவர்களுக்கு வாய்த்த இயற்ப்பெயர் காரணப்பெயராகி விட்டது .உலக அளவில் ஈழ விடுதலையை ஓவியத்தின் மூலம் கொண்டு சென்ற பெருமை , புகழ் ஓவியர் புகழேந்தி அவர்களையே சாரும் .ஈழத்தில் நடந்த தமிழ் இனப்படுகொலைகளை 30 ஆண்டுகளாக ஓவியத்தின் மூலம் உணர்த்தியவர் .சேனல் 4 காட்டியதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஓவியத்தில் காட்டியவர் ஓவியர் புகழேந்தி .ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஓவியத்தில் தீட்டிய ஒப்பற்ற ஓவியர் .

அவர் நினைத்து இருந்தால் அழகியலை ஓவியமாக்கி பணம் சேர்த்து பணக்காரன் ஆகி இருக்கலாம் .ஆனால் பணம் நிரந்தரமற்றது .இன உணர்வு ,மனித நேய ஓவியத்தால் அவர் சேர்த்துள்ள உலகப் புகழ் நிரந்தரமானது. அழியாதது .எனக்குள் ஈழ ஆதரவு கவிதை எழுதிட தாக்கத்தை ஏற்படுத்தியதும் ஓவியர் புகழேந்தி ஓவியமே .அவரது தந்தை பெரியார் ஓவியக் கண்காட்சி உள்பட பல ஓவியக் கண்காட்சி கண்டு வியந்தவன் .தந்தை பெரியார் ஓவியம் பலரும் வரைந்து இருக்கிறார்கள் .ஆனால் ஓவியர் புகழேந்தி அளவிற்கு தந்தை பெரியாரை கோட்டு ஓவியத்தில் பல்வேறு கோணங்களில் வரைந்தவர். இன்று வரை அதை முறியடிக்கும் ஓவியம் யாராலும் வரையப்பட வில்லை . நூல் ஆசிரியர் ஓவியர் புகழேந்தி அவர்கள் ஓவியக் கண்காட்சி நடத்தினால் மற்ற ஒரு சில ஓவியர்கள போல காட்சிக்கு ஓவியத்தை வைத்து விட்டு குளுகுளு அறையில் ஓய்வு எடுப்பவர் அல்ல .கண்காட்சி முடியும் வரை தினமும் இருந்து மக்களை சந்திப்பவர் .

இலங்கையைப் பொறுத்த மட்டில் தமிழர்கள் சுதந்திரமாக வாழ தனித் தமிழ் ஈழமே தீர்வு .இன்று கிடைக்காவிட்டாலும் என்றாவது கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. சிங்களர் தமிழர் இரண்டு இனத்தின் அமைதிக்கும் ,விடுதலைக்கும் தனி ஈழமே தீர்வு .இன்று இலங்கையில் நடப்பது உலகை ஏமாற்ற நடக்க நாடகம் என்பதை உலகம் விரைவில் அறியும் . ஒன்றுபட்ட இலங்கை என்பது புரியாதவர்களின் உளறல் .

ஒரு ஓவியர் மற்றொரு ஓவியரைப் பாராட்டுவதோ ,ஒரு கவிஞர் மற்றொரு கவிஞரைப் பாராட்டுவதோ ,ஒரு எழுத்தாளர் மற்றொரு எழுத்தாளரைப் பாராட்டுவதோ உளவியல் ரீதியாக நடக்காத ஒன்று. நூல் ஆசிரியர் ஓவியர் புகழேந்தி அவர்கள் மற்றொரு ஓவியரான எம். எப் .உசேன் அவர்களை மனம் திறந்து பாராட்டி உள்ளார் .அவரது நல்ல உள்ளத்திற்கு இந்த நூலே சான்று .

ஓவியர் எம் .எப் .உசேன் அவர்கள் கவியரசு கண்ணதாசனைப் போல வாழும் காலத்திலேயே பலரின் பாராட்டையும் சிலரின் விமர்சனத்தையும் பெற்றவர் .ஓவியர் எம் .எப் .உசேன் அவர்களை உலகப் புகழ் ஓவியராக பார்க்காமல் அவரை கண்டபடி விமர்சித்த மதவாதிகள் உண்டு .அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஓவியர் எம் .எப் .உசேன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்ட ஆய்வு போல ஆய்வு செய்து இந்த நூலை எழுதி உள்ளார் ஓவியர் புகழேந்தி பாராட்டுக்கள் .ஓவியர் எம் .எப் .உசேன் அவர்களின் புகைப்படங்கள் ,குடும்ப புகைப்படங்கள் ,அவரது புகழ் பெற்ற ஓவியங்கள் கருப்பு வெள்ளை ,மற்றும் வண்ண ஓவியங்கள் நூலில் உள்ளன .

இந்த நூல் அறிமுகவிழா மதுரையில் மணியம்மை தொடக்கப் பள்ளியில் புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் திரு .பி .வரதராசன் தலைமையில் நடந்தது .நானும் சென்று இருந்தேன் .தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அறிவியல் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற திரு இராம .சுந்தரம் அவர்கள் நூல் விமர்சனம் செய்தபோது நூலின் மொழி நடையை பாரட்டினார்கள் .நூலின் பின் பகுதியில் ஓவியம் தொடர்பான ஆங்கிலச் சொற்களுக்கு மிகச் சரியான தமிழ் கலைச் சொற்கள் எழுதி இருப்பதற்கும் பாராட்டைச் சொன்னார்கள் .

ஓவியர் எம் .எப் .உசேன் அவர்களின் 6 வயது புகைப்படம் ,திரும்பிய குதிரை ஓவியம் ,40 வயதில் ஓவியம் வரையும் புகைப்படம்,இளம் வயதில் எடுத்த புகைப்படம் ,இராஜ்யத்தின் படிம ஓவியம், குடும்பத்தினருடன் உள்ள புகைப்படம் ,குயவர்கள் மண் பாண்டம் செய்யும் ஓவியம் , நிறைய கோட்டு ஓவியங்கள் ,தன்னையே அவரே வரைந்த ஓவியம் ,1947 ஆம் ஆண்டிலேயே முற்போக்கு ஓவியர்கள் குழு தொடங்கி அவர்களுடன் உள்ள புகைப்படம் ,சிறுவன் குளிக்கும் ஓவியம் ,சர்ச்சை ஏற்படுத்திய சரஸ்வதி ஓவியம் ,குதிரைகளும் பெண்களும் உள்ள ஓவியம் ,பறக்கும் குதிரைகள் ஓவியம், உழைப்பாளியின் மே நாள் ஓவியம் ,மனித ஆதிக்கத்திற்கு எதிரான ஓவியம் , தன்னுருவ இரட்டை ஓவியம் , குழந்தைக்கு அன்பு செலுத்தும் அன்னை தெரசா ஓவியம் ,முதுமையில் அவரது புகைப்படம் ,நடிகை மாதுரி தீட்சத் உடன் உள்ள புகைப்படம்.நூல் ஆசிரியர் ஓவியர் புகழேந்தி அவர்களின் கடின உழைப்பை உணர முடிகின்றது .

நாம் கண்டிராத பல லட்சம் மதிப்பு மிக்க ,அல்ல விலை மதிப்பற்ற வண்ண ஓவியங்கள் ஹோலி ஓவியம் ,டோங்கா பொம்மை ஓவியம், சிலந்திக்கும் விளகிர்க்கும் இடையில் நிற்கும் பெண்கள் ஓவியம், மருத்துவ உதவி செய்யும் அன்னை தெரசா ஓவியம் ,கன்னி மேரியாக அன்னை தெரசா ஓவியம் ,மகாபாரதம் அனுமான் ஓவியம் ,காசிராம் கோட்வால் ஓவியம் ,அமைதி புறா ஓவியம் ,கராச்சி ஓவியம், அபிசரிகா ஓவியம்,பிரிட்டிஷ் இராஜ்ஜியம் ஓவியம் ,இசை கலைஞர் ஓவியம் ,அய்ந்தாவது வருகை ஓவியம் ,குதிரைகள் ஓவியம், அழகிய பெண் ஓவியம் இப்படி பல ஓவியங்கள் அழகிய வண்ணத்தில் உள்ளன .நூலிற்கான விலை இந்த ஓவியங்களுக்கே போதாது . வரலாறு இலவசம்தான் வாசகர்களுக்கு .குதிரைக்கு கொம்பு இல்லை .கொடிய நகம் இல்லை .மற்ற விலங்குகளுடன் மோதுவதில்லை .அசைவம் உண்பதில்லை .சக்தியை விரயம் செய்யாமல் ஆக்கப் பூர்வமாகப் பயன்படுத்தும் .அதனால்தான் மின்சார மோட்டார் சக்தியை குதிரை சக்தி என்று அளவிட்டார்கள் .குதிரை ஓவியர் உசேன் அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்ட காரணத்தால் அவரது பெரும்பாலான ஓவியங்களில் குதிரைகள் உள்ளன .

ஓவியர் எம் .எப் .உசேன் அவர்கள் ஓவியராக மட்டுமே நமக்கு தெரியும் ஆனால் அவர் பன்முக ஆற்றலாராக இருந்தது இந்த நூல் படித்தாலே விளங்கும் .எழுத்தாளர் ,திரைப்பட இயக்குனர் ,திரைப்பட தயாரிப்பாளராக ,சிந்தனையாளராக ,செயற் பாட்டாளாராக, எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த ரசிகனாக விளங்கிய வரலாறு படித்ததும் ஓவியர் எம் .எப் .உசேன் அவர்களின் மீதான மதிப்பு உயர்ந்து விடுகின்றது .இது நூல் ஆசிரியர் ஓவியர் புகழேந்தி அவர்களின் வெற்றி .

பொதுவாக கலைஞர்கள் என்றால் மது பழக்கம் உள்ளவர்கள் உண்டு. ஆனால் ஓவியர் உசேன் மது பழக்கம் இல்லாதவர் என்பதை நூல் உணர்த்துகின்றது .நூலில் உள்ள சில வரிகள் உங்கள் பார்வைக்கு .

“நான் விருந்துகளுக்குச் செல்வதை விரும்புவதில்லை .நான் குடிப்பதில்லை .பொதுவாக விருந்தில் மக்கள் இரவு 11 அல்லது 11.30 வரை குடிப்பார்கள் .அதன் பிறகுதான் உணவிற்கே உட்காருவார்கள். நான் உரையாடுவதில் திறன் பெற்றவனில்லை .ஒரு விருந்தில் மக்கள் பேசும்போது ,அவர்களுடைய உரையாடல் அறிவு பூர்வமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் .நான் உரையாடலை கேட்க விரும்புகிறேன் .ஆனால் அவர்கள் என்னைக் கேள்விகள் கேட்கும்போது நான் அமைதி குலைகிறேன் .” .

உலகப் புகழ் ஓவியர் உசேன் அவர்களுக்கு குடிப்பழக்கம் இல்லை என்ற ஒரு செய்தியை மட்டும் இன்றைய இளைய தலைமுறை உள்வாங்கிக் கொண்டால் போதும் .அதுவே நூலின் வெற்றி .குடி என்பது நம் திறமையை அழித்து விடும் என்பதை உணர வேண்டும் .
நன்றாக ஓவியம் வரைபவர்களுக்கு நன்றாக எழுத வராது .நன்றாக ஓவியம் வரைபவர்களுக்கு நன்றாக பேச வராது .ஆனால் நூல் ஆசிரியர் புகழேந்தி அவர்களுக்கு ஓவியம் ,எழுத்து ,பேச்சு ,மூன்று கலையும் வருகின்றது .

ஓவியர் எம் .எப் .உசேன் அவர்களைப் போலவே இவரும் பன்முக ஆற்றலாளராக உள்ளார் .உங்களுடைய வரலாறை நீங்கள் எழுத வேண்டும் .அதில் நீங்கள் ஈழம் சென்று கண்ட உணர்ந்த உணர்வுகள் .உங்கள் ஓவியக் கண்காட்சி நிகழ்த்திய உலகளாவிய தாக்கங்கள் எழுத வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்து முடிகின்றேன் .இது நூல் அல்ல ஆவணம் .
.

.

Please follow and like us:

You May Also Like

More From Author