மேற்கு வங்கம் : வங்கக்கடலில் உருவாகியுள்ள டானா புயல் நாளை தீவிரமடைந்து வலுவான புயலாக மாறும் என முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்கான முன்னேற்பாடுகளாக இன்று மேற்கு வங்கம், பெங்களுரு மற்றும் ஒடிசா மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தனர்.
மேலும், ரயில் சேவைகளும் தடைபட்ட நிலையில், புயலால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்க இந்திய கடற் படை தயாரான நிலையிலும் இருந்து வருகிறது. மேற்கொண்டு, பாதிப்புகள் ஏற்படும் ஒரு சில பகுதிகளுக்கு பொது மக்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, புயல் நாளை தீவிரமடைய உள்ளதன் காரணமாக முன்னேற்பாடு நடவடிக்கையாக மேற்கு வங்கத்தில், கொல்கத்தாவில் உள்ள சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையம் நாளை மாலை முதல் அடுத்த நாள் இரவு வரையில் இயங்காது என மேற்கு வங்கம் அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை மாலை 6 மணி முதல் அடுத்த நாள் (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணி வரை, கிட்டத்தட்ட 15 மணி நேரத்திற்கு விமான சேவைகள் இருக்காது என தெரிவித்துள்ளனர். நாளை தீவிரமடையும் டானா புயல் வடக்கு ஒடிசா மற்றும் மேற்குவங்க கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.